ராணிப்பேட்டை மாவட்டத்திலுள்ள ஜோலார்பேட்டையில் இருந்து சென்னை சென்ட்ரல் வரை ஏலகிரி எக்ஸ்பிரஸ் ரயில் இயக்கப்படுகிறது. இந்த ரயிலில் தினமும் அரசு, தனியார் நிறுவனங்களில் வேலை பார்ப்பவர்கள், வியாபாரிகள், பொதுமக்கள் என பலரும் பயணம் செய்கின்றனர். இந்நிலையில் ஆபத்தை உணராமல் சில வாலிபர்கள் 2 ரயில் பெட்டிகளை இணைக்கும் கொக்கி மீது நின்று பயணம் செய்வதாகவும், அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் பொதுமக்கள் வலியுறுத்தினர்.
இதனையடுத்து ரயில்வே போலீசார் சோதனை நடத்தி ரயில் பெட்டியில் இணைப்பு கொக்கி மீது உட்கார்ந்து பயணம் செய்த 3 பேரை பிடித்து விசாரித்தனர். அப்போது கூட்ட நெரிசல் காரணமாக இணைப்பு கொக்கி மீது உட்கார்ந்து பயணம் செய்ததாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து அவர்கள் டிக்கெட் எடுக்காமல் வந்ததால் டிக்கெட் பரிசோதகர் அபராதம் விதித்தார். பின்னர் இதுபோன்று ஆபத்தான முறையில் பயணம் செய்யக்கூடாது என போலீசார் எச்சரித்து அவர்களை அனுப்பி வைத்தனர்.