தாய்-மகள் இருவரும் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தர்மபுரி மாவட்டத்திலுள்ள செந்தில் நகர் அருகே இருக்கும் தண்டவாளத்தில் நேற்று மதியம் ரயில் மோதி 2 பெண்கள் இறந்து கிடந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் அந்த பெண்களின் உடல்களை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் நடத்திய விசாரணையில் உயிரிழந்த 2 பெண்களும் கிருஷ்ணகிரி மாவட்டத்தை சேர்ந்த ராதாம்மா(60) மற்றும் அவரது மகள் சுமித்ரா(32) என்பது தெரியவந்துள்ளது. இதில் சுமித்ராவிற்கு நரசிம்மன் என்ற கணவரும், ஹர்பிதா(14) என்ற மகளும் இருந்துள்ளனர்.
இந்நிலையில் அரசு பள்ளியில் 9-ஆம் வகுப்பு படித்து வந்த ஹர்பிதா வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்துள்ளார். இதற்காக பல்வேறு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றும் சிறுமியின் வயிற்று வலி சரியாகவில்லை. இதனால் கடந்த 10-ஆம் தேதி சிறுமி தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். அவரது உடல் தர்மபுரி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. இதனால் தர்மபுரிக்கு வந்த ராதாம்மாளும், சுமித்ராவும் மன உளைச்சல் இருந்துள்ளனர். பின்னர் மன உளைச்சலில் இருவரும் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டது தெரியவந்துள்ளது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.