Categories
தேசிய செய்திகள்

ரயில் மோதி 3 யானைகள் பலி…. தமிழக வனத்துறையினர் 6 பேரை சிறைபிடித்த கேரளா அதிகாரிகள்…. !!!!

யானைகள் மீது ரயில் மோதியது குறித்து விசாரிக்க சென்ற தமிழக வனத்துறையினரை கேரள அதிகாரிகள் சிறை பிடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

கோவையில் மதுக்கரை வனச்சரகத்தில் நேற்றிரவு தண்டவாளத்தை கடக்க முயன்ற யானை கூட்டத்தின் மீது கேரளாவில் இருந்து மங்களூர்- சென்னை இடையே இயக்கப்படும் சிறப்பு ரயில் பயங்கரமாக மோதியது. இதில் 3 யானைகள் சிறிது தூரம் ரயிலால் இழுத்துச் செல்லப்பட்டு பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த சம்பவம் குறித்து மதுக்கரை வனச்சரக அதிகாரிகள் மற்றும் ரயில்வே போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

முதற்கட்ட விசாரணையில், பாதுகாக்கப்பட்ட வனப்பகுதிக்குள் அதிவேகமாக ரயிலை இயக்கியது தெரியவந்தது. இதையடுத்து ரயில் இன்ஜினில் இருந்து வேகத்தை அளவிடும் ஸ்பீடோமீட்டர் சிப்பினை வனத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இதையடுத்து பாலக்காடு ரயில் நிலையத்துக்கு சென்ற தமிழக வனத் துறையினர் ஸ்பீடோமீட்டர் ஷிப் அடிப்படையில் கேள்விகளை எழுப்பினர். இதனால் ஆத்திரமடைந்த கேரள ரயில்வே அதிகாரிகள், தமிழக வனத் துறையினர் 6 பேரை சிறை பிடித்ததாக கூறப்படுகிறது.

ரயில் இன்ஜினில் இருந்து எடுக்கப்பட்ட ஸ்பீடோமீட்டர் ஷிப்பை ஒப்படைக்குமாறும், அதனை ஒப்படைக்க மறுத்தால் திருட்டு வழக்கு பதிவு செய்யப்படும் என்றும், தமிழக வனத் துறையினரை அவர்கள் மிரட்டியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இது குறித்த செய்திகள் ஊடகங்களில் வெளியானதையடுத்து சிறைபிடிக்கப்பட்ட தமிழக வனத் துறையினர் விடுவிக்கப்பட்டுள்ளனர். யானைகள் மீது ரயில் மோதிய விவகாரம் குறித்து விசாரிக்க சென்ற தமிழக வனத்துறை அதிகாரிகள் கேரள ரயில்வே அதிகாரிகளால் சிறை பிடிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

Categories

Tech |