திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள ஊருடையார் புரத்தில் வெள்ள பாண்டி என்பவர் வசித்து வருகிறார். இவர் வண்ணார்பேட்டையில் இருக்கும் தனியார் மார்க்கெட்டில் ஒன்று வாங்கினால் ஒன்று இலவசம் என்ற விளம்பரத்தின் அடிப்படையில் ரவை பாக்கெட்டை வாங்கியுள்ளார். அப்போது ஒரு பாக்கெட் விலை 43 ரூபாய் என குறிப்பிடப்பட்டிருந்தது. ஆனால் கூடுதலாக ஒரு ஒரு ரூபாய் சேர்த்து பில்லில் 44 ரூபாய் என குறிப்பிட்டு விற்பனை செய்துள்ளனர்.
இதுகுறித்து வெள்ள பாண்டி வழக்கறிஞரான பிரம்ம நாயகம் மூலம் திருநெல்வேலி நுகர்வோர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கினை விசாரித்த நுகர்வோர் ஆணைய தலைவர் கிளாட்சன், உறுப்பினர் கனகசபாபதி ஆகியோர் சம்பந்தப்பட்ட மார்க்கெட் வெள்ளபாண்டிக்கு மன உளைச்சல் ஏற்படுத்தியதற்காக ஐந்தாயிரம் ரூபாய் நஷ்ட ஈடு, வழக்கு செலவு தொகை ஆயிரம் ரூபாய், கூடுதலாக வசூலித்த ஒரு ரூபாய் என மொத்தம் 6001 ரூபாயை வழங்க வேண்டும் என உத்தரவு பிறப்பித்தனர்.