உக்ரைன் நாட்டின் மரியுபோல் நகரை முழு கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து இருப்பதாக ரஷ்ய ராணுவமானது அறிவித்துள்ளது. இதன் வாயிலாக மரியுபோல் நகருக்கு சுதந்திரம் கிடைத்து இருப்பதாக ரஷ்ய அதிபர் புதின் பெருமிதத்துடன் தெரிவித்துள்ளார். உக்ரைன்-ரஷ்யா நாடுகளுக்கு இடையேயான போர் 56 நாட்களுக்கும் மேலாக நீடித்து வருகிறது. அவ்வாறு போர் தொடங்கியதில் முதல் கிழக்கு உக்ரைனிலுள்ள மரியுபோல் நகரை குறி வைத்து நடத்தப்பட்ட ரஷ்யாவின் கடும் தாக்குதலால் அந்த நகரம் உருக்குலைந்து போய்விட்டது. இந்நிலையில் மரியுபோல் நகரம், உக்ரைனை விட்டு வெற்றிகரமாக விடுவிக்கப்பட்டதாக ரஷ்யா அறிவித்தது. உக்ரைனிய வீரர்கள் தங்கி இருக்கும் அசோவ்ஸ்டல் எஃகு ஆலையைத் தவிர்த்து அந்நகரத்தை முழுமையாக ரஷ்யா கட்டுப்படுத்துகிறது என ரஷ்யாவின் பாதுகாப்பு மந்திரி செர்ஜி ஷோய்கு அறிவித்தார்.
அவரது அறிவிப்பை அடுத்து ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின், மரியுபோலின் வெற்றிகரமான விடுதலையை பாராட்டியுள்ளார். மேலும் ஒரு ஈகூட, தப்பிக்க முடியாதவாறு இந்த தொழிற்பேட்டையை அடைத்து விடுங்கள். ஆனால் அசோவ்ஸ்டல் எஃகுஆலையைத் தாக்க வேண்டாம். அங்கு இருந்து யாரும் தப்ப முடியாதவாறு தடுப்பு நடவடிக்கைகள் வாயிலாக முற்றுகையிட்டு கைப்பற்றுங்கள் என்று புதின் ரஷ்ய படைகளிடம் அறிவுறுத்தியுள்ளார். ஆகவே மரியுபோல் ஸ்டீல் தொழிற்சாலை மீதான தாக்குதலுக்குப் பதிலாக அதை முற்றுகையிட்டு கைப்பற்றுமாறு புதின் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
சென்ற 2014ஆம் வருடம் முதல் உக்ரைனை சீர்குலைக்கும் ரஷ்யாவின் நடவடிக்கையின் மையப்புள்ளியாக நிலக்கரி மற்றும் எஃகு உற்பத்தி செய்யும் கிழக்கு உக்ரைனின் டான்பாஸ் பகுதி இருந்து வருகிறது. இந்நிலையில் உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி இந்த வாரம் ஆற்றிய உரையில் “டான்பாஸ் பகுதியைக் கைப்பற்ற ரஷ்யா தாக்குதலைத் தொடங்கி இருக்கிறது. டான்பாஸ்க்கான போர் துவங்கிவிட்டது என்று தெரிவித்தார். தற்போது மரியுபோல், ரஷ்யாவின் கட்டுப்பாட்டுக்குள் வந்து இருப்பதால் இன்னும் புது உத்வேகத்துடன் டான்பாஸ் பகுதியை கைப்பற்ற ரஷ்யா முனைப்பு காட்டும் என்று தெரிகிறது.