ரஷ்ய படைகள் உக்ரைன் மீது 2 மாதங்களுக்கும் மேலாக தாக்குதல் நடத்தி வருகிறது. அண்மையில் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி, ஹிட்லர் தலைமையிலான நாஜி படைகள் 2ஆம் உலக போரில் யூதர்களை தாக்கியது போல தற்போது உக்ரைனை ரஷ்ய படைகள் தாக்குவதாக கூறியிருந்தார். இந்நிலையில் இது தொடர்பாக பேசிய ரஷ்ய வெளியுறவு அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ், “அதிபர் ஜெலன்ஸ்கி போன்ற சில பிரமுகர்கள் உக்ரைனில் யூதர்களாக இருந்தாலும் கூட நாஜி கூற்றுகளும் அங்கு இருக்கும்.
ஏனென்றால் யூத ரத்தம் ஹிட்லருக்கும் இருந்தது. பொதுவாக யூதர்கள்தான் தீவிரமான யூத எதிர்ப்பாளர்களாக உள்ளனர் என்று யூத மக்கள் கூறுகின்றனர்” என தெரிவித்துள்ளார். யூதர்கள் குறித்த செர்ஜி லாவ்ரோவின் கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இது தொடர்பாக இஸ்ரேல் ரஷ்யாவுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
அதோடு மட்டுமில்லாமல் இஸ்ரேல் வெளியுறவு அமைச்சர் யாயிர் லாபிட் இதுகுறித்து கூறுகையில், “ரஷ்ய வெளியுறவு அமைச்சர் செர்ஜி லாவ்ரோவின் கருத்து மூர்க்கத்தனமானது மற்றும் மன்னிக்க முடியாதது ஆகும். இது ஒரு பயங்கரமான வரலாற்று பிழை. யூதர்களுக்கு எதிராக குற்றம்சாட்டும் விதமாக யூதர்களே யூதருக்கு எதிர்ப்பு என்று கூறுகின்றனர்” என்று தெரிவித்துள்ளார்.