உக்ரைனுக்கு அதிநவீன ராக்கெட் ஏவுதள அமைப்பை சில நட்பு நாடுகள் வழங்கியுள்ளது.
உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்து 143 வது நாளாக நீடித்துக் கொண்டு வருகின்றது. இந்த போரில் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் போரில் உக்ரைனுக்கு அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் ஆயுதம் போன்ற உதவிகளை அளித்து ஆதரவு தெரிவித்து வருகின்றன. மேலும், உக்ரைனுக்கு ஆதரவு அளிக்கும் வகையில் ரஷியா மீது பொருளாதார தடைகளை பல்வேறு மேற்கத்திய நாடுகள் விதித்துள்ளது.
இதனை தொடர்ந்து அதிநவீன ராக்கெட் ஏவுதள அமைப்பு ராணுவத்தில் இணைக்கப்பட்டுள்ளதாக உக்ரைன் பாதுகாப்புத்துறை மந்திரி கூறியுள்ளார். எம்270 எனப்படும் இந்த ராக்கெட் அமைப்பிலிருந்து 40 வினாடிகளில் 12 முறை ராக்கெட்டுகளை ஏவமுடியும். இந்த ஆயுதம் ரஷியாவுக்கு எதிரான போரில் முக்கிய பங்காற்றும் என உக்ரைன் கருதுகின்றது. எம்270 ரக ராக்கெட் ஏவுதள அமைப்பு அமெரிக்காவால் தயாரிக்கப்படும் நிலையில் உலகின் பல நாடுகள் இந்த அமைப்பை வைத்துள்ளன. இந்த அதிநவீன ராக்கெட் ஏவுதள அமைப்பை இதுவரை உக்ரைன் தங்களுக்கு எந்த நாடு வழங்கியுள்ளது என்ற விபரத்தை தெரியப்படுத்தவில்லை. மேலும் இங்கிலாந்து இந்த ராக்கெட் அமைப்பை உக்ரைனுக்கு வழங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.