ரஷ்யாவிலிருந்து 15 ஆயிரத்திற்கும் அதிகமான கோடீஸ்வரர்கள் வெளியேறும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர் என இங்கிலாந்து அமைச்சகம் தெரிவித்துள்ளது.
உக்ரைன் ரஷ்யா இடையிலான போர் தொடர்ந்து நீடித்துக் கொண்டிருக்கிறது. ரஷ்ய ராணுவ படை வீரர்கள் தொடர்ந்து முன்னேறி வருகின்றனர். இரு நாட்டின் வீரர்களும், பொதுமக்களும் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர். இந்த போரில் ரஷ்யாவை கட்டுப்படுத்தும் நோக்கில், அமெரிக்கா மற்றும் இங்கிலாந்து போன்ற நாடுகள் பொருளாதார தடைகளை விதித்துள்ளனர். உக்ரைனுக்கு அமெரிக்கா உள்பட சில நாடுகள் ஆயுத உதவிகளையும், நிதி உதவியையும் வழங்கி வருகின்றன. இந்த போரை நிறுத்தும் முயற்சியின் ஒரு பகுதியாகவும், தங்களை பாதுகாத்து கொள்ளவும் ரஷ்யாவில் இருந்து பல்வேறு பெரிய நிறுவனங்களும் வெளியேறியுள்ளன. இந்த போரானது நீண்டகாலத்திற்கு தொடர கூடிய சூழல் நிலவியுள்ளது.
இந்நிலையில், இங்கிலாந்து நாட்டின் பாதுகாப்பு அமைச்சகம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது, “வர்த்தகத்தில் ஈடுபடுவோர் மற்றும் பணக்கார பிரமுகர்கள் ரஷ்யாவில் இருந்து வெளியேற கூடிய சூழலால், அந்நாட்டின் பொருளாதாரத்தின் மீது போரால் ஏற்படும் நீண்டகால சேதம் இன்னும் அதிகரிக்கும் என தெரிவித்துள்ளது. ரஷ்யாவிலிருந்து வெளியேறுவதற்கான விண்ணப்பங்களிலிருந்து, 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கோடீஸ்வரர்கள் முன்பே அந்நாட்டில் இருந்து கிளம்ப முயற்சித்துள்ளனர் என தெரியவந்துள்ளது” என்று இங்கிலாந்து அமைச்சகம் தெரிவித்துள்ளது.