உக்ரைனில் இருந்து 3 மருத்துவ மாணவர்கள் தாயகம் திரும்பியுள்ளனர்.
உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்து பல முக்கிய நகரங்களை கைப்பற்றி வருகிறது. இதனால் அங்கு பெரும் பதற்றம் நிலவி வருகிறது. இந்நிலையில் அங்கு படிக்கும் தமிழக மாணவர்களை மீட்க அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. அந்த முயற்சியின் பலனாக பல மாணவர்கள் தாயகம் திரும்பியுள்ளனர். இந்நிலையில் குமரி மாவட்டத்தைச் சேர்ந்த மெர்லின் ஜெபா, அபின், ப்ரீத்தி கங்கா ஆகியோர் சொந்த ஊருக்கு திரும்பியுள்ளனர். இவர்கள் விமானம் மூலம் தூத்துக்குடிக்கு வந்தபிறகு அமைச்சர் மனோ தங்கராஜ் அவர்களை காரில் அழைத்து வந்து பெற்றோர்களிடம் ஒப்படைத்துள்ளார். இந்த 3 மாணவர்களும் அமைச்சர் மனோ தங்கராஜ்கும் மத்திய மாநில அரசுகளுக்கும் நன்றிகளை தெரிவித்தனர்.
அதன்பிறகு மாணவர்கள் பத்திரிகையாளர்களிடம் கூறியதாவது, நாங்கள் உக்ரைனில் உள்ள பெட்ரோ மொபைலியா நேஷனல் பல்கலைக்கழகத்தில் மருத்துவம் படித்து வருகிறோம் என்றும், உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்ததால் நாங்கள் சுரங்கங்களில் 6 நாள்கள் தங்கியிருந்ததாகவும் கூறியுள்ளனர். அதன்பிறகு இந்திய தூதரகம் எங்களை மீட்க நடவடிக்கை எடுத்தது. இதனையடுத்து நாங்கள் இருந்த இடத்தில் இருந்து பேருந்து மூலம் வால்ட்டோவுக்கு வந்து அங்கிருந்து ருமேனியாவுக்கு வந்தோம். அதன்பிறகு விமானம் மூலமாக சொந்த ஊருக்கு அழைத்து வரப்பட்டோம் என்றும் கூறியுள்ளனர். மேலும் நாங்கள் அங்கிருந்த நாட்களில் உக்ரைன் அரசு இந்திய மாணவர்கள் என்று பாகுபாடு பார்க்காமல் சரியான முறையில் உணவுகளை வழங்கியதாகவும் கூறியள்ளனர்.