ரஷ்யா தலைமையில் ‘வொஸ்டோக் 2022’ என்ற பெயரில் பல்வேறு நாடுகளின் கூட்டு ராணுவ பயிற்சி இன்று முதல் செப்டம்பர் 7ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இதில் ராணுவம், விமானப்படை, கப்பல் படை என முப்படைகளின் கூட்டு பயிற்சி நடைபெறுகிறது. இந்த கூட்டு ராணுவ பயிற்சியில் இந்தியா, சீனா, தஜிகிஸ்தான் அசர்பைஜான், பெலாரஸ் உள்ளிட்ட பல நாடுகள் கலந்து கொண்டுள்ளது. இந்த கூட்டு பயிற்சியில் கப்பற்படை தொடர்பான பயிற்சியில் மட்டும் இந்தியா பங்கேற்காது என்று தகவல் வெளியாகி உள்ளது.
ஏனென்றால் ஜப்பான் கடற்பகுதி அருகில் கப்பற்படை பயிற்சி நடைபெறுவதால் இந்தியா இந்த பயிற்சியில் பங்கேற்காது என்று தகவல் வெளியாகியுள்ளது. ஆனால் மீதமுள்ள பயிற்சிகளில் பங்கேற்க உள்ளது. இந்நிலையில் அமெரிக்க வெள்ளை மாளிகை செய்தி தொடர்பாளர் கரீன் ஜின்-பைய்ரி செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது ரஷ்யாவுடன் இந்தியா போர் பயிற்சியில் ஈடுபடுவது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதில் அளித்த அவர், உக்ரைன் மீது தூண்டுதலற்ற போரை ரஷியா நடத்தி வருகிறது. இந்த சூழ்நிலையில் ரஷ்யவுடன் எந்த நாடும் கூட்டு ராணுவ பயிற்சியில் ஈடுபடுவது கவலை அளிக்கிறது என்று தெரிவித்துள்ளார்.