உக்ரைன் மீதான ரஷ்யா போர் இன்று (மார்ச்.9) 14-வது நாளாக நடைபெற்று வருகிறது. இதில் உக்ரைனின் பல நகரங்களை ஆக்கிரமித்து வரக்கூடிய ரஷ்ய படைகள் தலைநகரான கீவ்வை ஆக்கிரமிப்பதில் அதிக தீவிரம் காட்டி வருகிறது. இதன் காரணமாக உக்ரைன் மற்றும் ரஷ்ய படைகளுக்கு இடையே கடும் மோதல் ஏற்பட்டு வருகிறது. இப்போரில் ரஷ்ய சார்பாக பாதுகாப்பு படையினர் மற்றும் உக்ரைன் தரப்பில் பாதுகாப்பு படையினர், பொதுமக்கள் என்று இரு தரப்பிலும் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர். இந்த போரை நிறுத்துவதற்கு பல நாடுகள் முயற்சித்து வருகின்றன.
அதன்படி உக்ரைனின் சிலபகுதிகளில் தற்காலிகமாக போரை நிறுத்துவதாக ரஷ்யா அறிவித்துள்ளது. இந்தநிலையில் உக்ரைன் அதிபரான வோலோடிமிர் செலன்ஸ்கி காணொளியின் வாயிலாக இங்கிலாந்துபாராளுமன்றத்தின் ஹவுஸ்ஆப் காமன்ஸில் வரலாற்று சிறப்புமிக்க உரை ஆற்றினார். அதாவது, இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சனிடம், “மேற்கத்திய நாடுகளின் உதவிக்காக நாங்கள் உங்களின் உதவியை எதிர்பார்க்கிறோம். இந்த உதவிக்கு நாங்கள் நன்றி உள்ளவர்களாக இருப்போம். மேலும் உங்களுக்கு நான் நன்றி உள்ளவனாக இருப்பேன்” என்றும் அதிபர் வோலோடிமிர் செலன்ஸ்கி தெரிவித்தார்.
அதுமட்டுமல்லாமல் அவர் “தயவு செய்து ரஷ்யாவிற்கு எதிரான பொருளாதாரத் தடைகளின் அழுத்தத்தை அதிகரித்து, அந்நாட்டை பயங்கரவாத நாடாக அங்கீகரிக்க வேண்டும். எங்கள் உக்ரைனிய மக்கள் பாதுகாப்பாக இருப்பதை உறுதிசெய்ய வேண்டும். ஆகவே தயவு செய்து நீங்கள் செய்ய வேண்டியதையும், உங்கள் நாட்டின் மகத்துவத்தால் செய்யுங்கள். அத்துடன் உக்ரைனுக்கு மகிமை, இங்கிலாந்துக்கு மகிமை என்று கூறினார். இந்த உணர்ச்சிகரமான உரையில், ஜெலென்ஸ்கி இங்கிலாந்தின் வின்ஸ்டன் சர்ச்சிலின் வார்த்தைகளை நினைவு கூர்ந்தார். அதுமட்டுமல்லாமல் ரஷ்ய துருப்புக்களை ஆகாயம், கடல் மற்றும் தெருக்களிலும் எதிர்த்துப் போராடுவதாக உறுதியளித்தார்.