ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினின் நெருங்கிய உதவியாளரின் மகள் கார் விபத்தில் பலியானதாக தகவல் வெளியாகியுள்ளது. அதாவது புதினின் நெருங்கிய உதவியாளரான அலெக்சாண்டர் டுகினின் மகள் டாரியா டுகினா, மாஸ்கோவில் அவர் பயணித்த கார் வெடித்ததில் கொல்லப்பட்டிருக்கலாம் என்று ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளது. மாஸ்கோபிராந்தியத்தில் உள்ள ஓடிண்ட் சோவ்ஸ்கி மாவட்டத்தில் ஒரு கார் தீப்பற்றி எரிந்தது என செய்தி வெளியாகியது. இந்த விபத்தில் ரஷ்ய அரசியல் தத்துவவாதியும், ஆய்வாளருமான அலெக்சாண்டர் டுகின் மகள் இறந்திருக்கலாம் என செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
நெடுஞ்சாலையில் விபத்து நடைபெற்ற இடத்திற்கு டுகின் வந்ததாகவும் கூறப்படுகிறது. கிரிமியா மற்றும் உக்ரைனில் ரஷ்ய ராணுவ நடவடிக்கைகளுக்கு பின்னால் இருந்தவர் அலெக்சாண்டர் டுகின் என கூறப்படுகிறது. இதில் டுகின் சில மேற்கத்திய ஆய்வாளர்களால் “புதினின் மூளையாக செயல்படுபவர்” என அடிக்கடி விவரிக்கப்படுகிறார். அத்துடன் டுகின் கடந்த 2014 மற்றும் 2015-ல் ஐரோப்பிய ஒன்றியம், அமெரிக்கா மற்றும் கனடாவால் தடைவிதிக்கப்பட்டவர். டுகினின் மகள் டாரியா டுகினா இந்த வருடம் ஜூலை மாதம் இங்கிலாந்தால் தடைவிதிக்கப்பட்டவர் ஆவார்.