ரஷ்ய அதிபர் புதினுடன், பிரதமர் நரேந்திரமோடி நேற்று தொலைபேசியில் உரையாடினார். இரு நாட்டு தலைவர்கள் இடையில் நடைபெற்ற இந்த பேச்சுவார்த்தையின்போது, உக்ரைனில் நிலவும் சூழ்நிலையை, பேச்சுவார்த்தை மற்றும் இராஜதந்திரத்தின் வாயிலாக தீர்வுகாண வேண்டும் என்ற இந்தியாவின் நீண்டகால நிலைப்பாட்டை பிரதமர் மீண்டும் வலியுறுத்தினார். கடந்த 2021 டிசம்பரில் அதிபர் புதினின் இந்திய பயணத்தின்போது எடுக்கப்பட்ட முடிவுகளை செயல்படுத்துவது தொடர்பாக இருதலைவர்களும் ஆய்வு மேற்கொண்டனர்.
அதிலும் குறிப்பாக விவசாயப் பொருட்கள், உரங்கள் மற்றும் மருந்துப் பொருட்களில் இருதரப்பு வர்த்தகத்தை மேலும் ஊக்குவிக்கும் விதம் பற்றி அவர்கள் கருத்துகளைப் பரிமாறிக் கொண்டனர். சர்வதேச எரிசக்தி மற்றும் உணவுச்சந்தைகளின் நிலை உள்ளிட்ட உலகளாவிய பிரச்சனைகள் தொடர்பாகவும் தலைவர்கள் விவாதித்தனர். உலகளாவிய மற்றும் இருதரப்பு விவகாரங்களில் தொடர்ந்து ஆலோசனைகளை நடத்துவதற்கு தலைவர்கள் ஒப்புக் கொண்டனர்.