உக்ரைன் மீது ரஷ்யா கடந்த பிப்ரவரி மாதம் போரை தொடங்கியது. அதில் முக்கிய நகரங்களில் ஒன்றான கெர்சன் நகரை ரஷ்யா தன்னுடைய கட்டுப்பாடுகளுக்குள் வந்தது. இந்நிலையில் ரஷ்ய படைகளின் தாக்குதலால் அந்த நகரமே உருக்குலைந்து போனது. ஆனால் உக்ரைன் படைகளின் பதிலடி தாக்குதலால் நெருக்கடி ஏற்பட்டவுடன் பின்வாங்கியுள்ளது. இதனையடுத்து ரஷ்ய படைகள் கெர்சனிலிருந்து இருந்து திரும்பப் பெறப்பட்டு ஞாயிற்றுக்கிழமையுடன் ஒரு மாதம் முடிவடைந்துள்ளது. ஆனாலும் அங்கு பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை திரும்பவில்லை. அதாவது நகரில் மின்சாரம் மற்றும் குடிநீருக்கு தொடர்ந்து தட்டுப்பாடு நிலவி வருகிறது.
ரஷ்ய படைகளின் வான்வழி தாக்குதல் நகரையொட்டி ஓடும் ஆற்றின் மறு கரையிலிருந்து தொடர்கிறது. கடந்த மாதம் மட்டும் இந்த தாக்குதல் 41 பேர் உயிரிழந்திருப்பதாகவும், 96 பேர் படுகாயம் அடைந்துள்ளதாகவும் பிராந்திய நிர்வாகம் கூறியுள்ளது. ரஷ்யா கடந்த வெள்ளிக்கிழமை மட்டும் கெர்சன் பிராந்தியத்தில் எரிகுண்டு, பீரங்கிகள், ராக்கெட் மூலமாக 68 முறை தாக்குதல் நடத்தியுள்ளது. ரஷ்ய படைகளின் இந்த தாக்குதலால் கட்டிடங்கள் மற்றும் குடியிருப்பு பகுதிகள் இடிந்து கிடக்கிறது. மேலும் இடிபாடுகளை அகற்றி போக்குவரத்தை சீர் செய்வது உக்ரைன் படையினருக்கு பெரும் சவாலாக இருக்கிறது.
அதுவும் தற்போது நிலவும் கடும் குளிரால் இந்த பணி மிகவும் கடினமாக இருப்பதாக உக்ரைன் ராணுவம் கூறியுள்ளது. அதேபோல் கெர்சனில் உள்ள ஒரு பிரதான சாலை பல நாட்களாக மூடப்பட்டுள்ளது. ஏனென்றால் அந்த சாலையில் ரஷ்ய படையினர் விட்டு சென்ற கண்ணிவெடிகளின் ஆபத்து தொடர்வதால் அந்த சாலையை பயன்படுத்த தடைவிதிக்கப்பட்டுள்ளது. கெர்சனில் கோதுமை, தக்காளி, தர்பூசணி போன்றவை அதிக அளவில் சாகுபடி செய்யப்படுகிறது. ஆனால் இந்த தாக்குதலில் விவசாய நிலங்களும் தப்பவில்லை. விவசாய பணிகளை தொடங்குவதற்கு பல மாதங்கள் ஆகலாம் என்ற நிலையில் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பெரும் சிக்கலாகி உள்ளது.