அசாமில் திப்ரூகார் பல்கலைகழகத்தின் விடுதியில் தங்கி எம்காம் பயின்று வந்த மாணவர் ஆனந்த் சர்மா சென்ற 27-ஆம் தேதி விடுதியின் 2வது மாடியிலிருந்து குதித்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியது. இதையடுத்து சிகிச்சைக்கு பிறகு ஆனந்தின் உடல்நிலை தேறியது. இது தொடர்பாக 5 பேர் மீது ஆனந்தின் பெற்றோர் காவல் நிலையத்தில் புகாரளித்தனர். அவர்களில் நிரஞ்சன் தாக்குர் என்ற குற்றவாளியை காவல்துறையினர் முதலாவதாக கைது செய்தனர். இது தவிர்த்து 3 நபர்களை பிடித்து விசாரித்தனர்.
இச்சம்பவத்தில் 21 மாணவர்களை பல்கலைக்கழக நிர்வாகம் சஸ்பெண்டு செய்தது. மூத்த மாணவர்களின் தொடர் ராகிங் தொல்லை காரணமாக பல்கலைகழகத்தின் உயரதிகாரிகளிடம் ஆனந்த் தகவல் தெரிவித்துள்ளார். மேலும் பல்வேறு மூத்தமாணவர்களின் பெயர்களை குறிப்பிட்டு ஆனந்த் கடிதமும் எழுதியுள்ளார். இருப்பினும் இதை மறைக்கும் முயற்சியில் பல்கலைக்கழக நிர்வாகமானது ஈடுபட்டுள்ளது என கூறப்படுகிறது. இந்த சம்பவத்தில் அரசியல் அறிவியல் பயிலும் சுப்ரோஜோதி பருவா என்ற மற்றொரு மாணவரும் கைது செய்யப்பட்டார்.
இதற்கிடையில் நீவார் என்ற மாணவரிடமும் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வந்தனர். இந்நிலையில் ராகிங் சம்பவத்தில் முக்கிய குற்றவாளி காவல் நிலையத்தில் இன்று சரணடைந்துள்ளார். அதாவது ஒருவார காலம் காவல்துறையினரிடம் சிக்காமல் இருந்து வந்த ராகுல் சேத்ரி என்ற அந்நபரை கைது செய்துள்ளனர். இந்த விவகாரத்தில் தொடர்புடைய 7 நபர்களை காவல்துறையினர் கைது செய்திருக்கின்றனர். மேலும் இந்த சம்பவத்தில் 3 வார்டன்களை அதிகாரிகள் சஸ்பெண்டு செய்திருந்தனர்