காங்கிரஸ் கட்சியின் தலைவராக மீண்டும் ராகுல் காந்தியை தேர்வு செய்ய அந்த கட்சியின் மூத்த தலைவர்கள் முடிவு செய்துள்ளதாக தகவல்கள் கசிந்துள்ளன.
2017 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் முதல் காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய தலைவராக ராகுல் காந்தி பொறுப்பு வகித்து வந்தார். ஆனால் கடந்த ஆண்டு மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு ஏற்பட்ட பெரும் பின்னடைவை தொடர்ந்து கட்சித் தலைவர் பதவியில் இருந்து அவர் விலகினார். ஏற்கனவே தலைவராக இருந்த சோனியா காந்தி 2019ஆம் ஆண்டு ஆகஸ்ட் 10ம் தேதி இடைக்கால தலைவராக பொறுப்பேற்று அந்த பொறுப்பில் நீடித்து வருகிறார்.
அடுத்த 6 மாதத்தில் புதிய தலைவர் தேர்வு செய்யப்படுவார் என்று கடந்த ஆகஸ்ட் மாதம் நடந்த காங்கிரஸ் காரியகமிட்டி கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. அடுத்த ஆண்டு தமிழ்நாடு, கேரளம் மேற்கு வங்கம் உள்ளிட்ட 5 மாநிலங்களில் பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளதால் மீண்டும் ராகுல் காந்தியை அகில இந்திய தலைவராக தேர்வு செய்ய மூத்த தலைவர்கள் முடிவு செய்துள்ளதாக டெல்லி தகவல்கள் கூறுகின்றன.
இதற்கான கூட்டம் இந்த ஆண்டு இறுதியிலோ அல்லது அடுத்த ஆண்டு தொடக்கத்திலோ இருக்கும் என்று தெரிகிறது. காட்சிகள் எடுக்கப்படும் முக்கிய முடிவுகளில் ராகுல்காந்தியின் பங்களிப்பு பெருமளவு இருப்பதால் ராகுல் மீண்டும் தலைவராக தேர்ந்தெடுக்கப்படுவது சம்பிரதாயமாக மட்டுமே இருக்கும் என்றும் கூறப்படுகிறது.