ராகுல் காந்தி கூட காமராஜர் மணி மண்டபம் வந்து அஞ்சலி செலுத்தவில்லை என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை விமர்சனம் செய்துள்ளார்.
பெருந்தலைவர் காமராஜர் நினைவு நாளை முன்னிட்டு நேற்று பாஜக சார்பில் அஞ்சலி செலுத்தப்பட்டது. பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, மாபெரும் பெருந்தலைவர் கர்மவீரர் காமராஜர் அவர்களுடைய 46-வது நினைவு நாளில் அவருடைய சமாதிக்கு வந்து மணி மண்டபத்திற்கு வந்து பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் எங்களுடைய அஞ்சலியை செலுத்தியிருக்கிறோம்.
இதற்கு முன்னால் நம்முடைய மகாத்ம காந்தி அவருடைய ஜெயந்தியான இன்று அவருடைய திரு உருவ சிலைக்கு கூட பாரதிய ஜனதா கட்சி சார்பில் எங்களுடைய வணக்கத்தையும் நன்றிக் கடனையும் செலுத்தி இருக்கிறோம். நம்முடைய காமராஜர் ஐயாவின் உடைய சமாதிக்கு வரும்பொழுது ஒரே ஒரு விஷயம் மட்டும் நமக்கு தெரிகிறது.
தமிழ்நாடு அரசியல் காமராஜர் அவர்கள் கொண்டு வந்த பாதையில் இருந்து எவ்வளவு விலகி இருக்கிறது என்பதை நாம் அப்பட்டமாக எங்கே பார்க்க முடிகிறது. ஒரு அற்புதமான மாமனிதருக்கு காங்கிரஸ் கட்சியிலே சோனியா காந்தி அவர்கள் தலைவரான பின்பு காமராஜர் அவர்களுக்கு அஞ்சலி செலுத்தவில்லை, ராகுல் காந்தி அவர்கள் பலமுறை சென்னை வந்திருக்கிறார் வேறு எல்லா இடத்திற்கும் சென்றிருக்கிறார் கர்மவீரர் காமராஜர் அவருடைய நினைவிடத்திற்கு வந்து அஞ்சலி செலுத்தவில்லை.
அதேபோல இன்று காலையில் கூட பார்த்திருக்கலாம். காங்கிரஸ்காரர்கள் இந்த ரோட்டை தாண்டி இங்கேயும் அங்கேயும் போகிறார்கள் யாரும் உள்ளே வந்து நம்முடைய கர்மவீரர் காமராஜர் ஐயா அவர்களுக்கு அஞ்சலி செலுத்தவில்லை. நம்முடைய மாண்புமிகு முதலமைச்சர் திரு மு க ஸ்டாலின் அவர்கள் இன்றைக்கு ஏர்போட் போய் விமானத்தை பிடித்து மதுரைக்கு செல்கிறார் அவரும் கூட வந்திருக்கவேண்டும் இந்த மாமனிதனுக்கு அவருடைய 46-வது நினைவு நாள் அஞ்சலி செலுத்த வேண்டும் என அண்ணாமலை வேண்டுகோள் விடுத்தார்.