கல்வி மற்றும் அறிவியல் படித்த ஏராளமான இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என கூறப்பட்டுள்ளது.
சென்னையில் உள்ள மேற்கு மாம்பலத்தில் தனியார் திருமண மண்டபம் ஒன்று அமைந்துள்ளது. இங்கு கலைஞர் கணினி கல்வியகத்தின் சான்றிதழ் வழங்கும் விழா மற்றும் 12-ம் வகுப்பில் 500-க்கு மேல் மதிப்பெண் எடுத்த மாணவ-மாணவிகளுக்கு ரூபாய் 2,000 ஊக்கத்தொகை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் நடிகர் ராகவா லாரன்ஸ், இந்தியா விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
இவர்கள் மாணவ-மாணவிகளுக்கு சான்றிதழ்கள் மற்றும் ஊக்கத்தொகைகளை வழங்கினார்கள். இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்களிடம் மருத்துவ மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் பேசினார். அவர் சைதாப்பேட்டையில் உள்ள 500-க்கும் மேல் மதிப்பெண் எடுத்த 12-ம் வகுப்பு மாணவ-மாணவிகள் உயர்கல்வியில் சேர போதிய பண வசதி இல்லாவிட்டால் கலைஞர் கணினி கல்வியகத்திடம் தகவல் தெரிவித்தால் மாணவ-மாணவிகளின் கல்வி கட்டண செலவு ஏற்றுக்கொள்ளப்படும் என்றார்.
இதனையடுத்து நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்களிடம் நடிகர் ராகவா லாரன்ஸ் பேசினார். அவர் நிகழ்ச்சியில் நான் கலந்து கொள்வதற்கு முக்கிய காரணம் அமைச்சர் மா. சுப்ரமணியன் தான் என்றும், அவர் மக்களுக்காக பல்வேறு விதமான உதவிகளை செய்து வருகிறார் எனவும் கூறினார். அதன் பிறகு மயில்சாமி அண்ணாதுரை அறிவியல் வளர்ச்சிக்கு சிறப்பு பங்கு வகிக்கிறார் என்றார். இதைத்தொடர்ந்து இந்திய விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்களிடம் பேசினார்.
அவர் அமெரிக்கா மற்றும் ரஷ்யா உள்ளிட்ட நாடுகள் பல முயற்சிகளுக்கு பிறகு செவ்வாய் கிரகத்தை அடைந்தது. சீனா, ஜப்பான் போன்ற நாடுகளால் செவ்வாய் கிரகத்தை அடைய முடியவில்லை. ஆனால் இந்தியா முதல் முயற்சியிலேயே செவ்வாய் கிரகத்தை அடைவதில் வெற்றி கண்டது. இதற்கு காரணம் அறிவியல் வளர்ச்சி தான். அன்றைய காலகட்டத்தில் கல்வி என்பது எழுத படிக்க தெரிந்தாலே போதுமானது என்று இருந்தது.
ஆனால் இன்றைய சூழலில் கணினி வழி கல்வி எல்லாத் துறைகளிலும் முக்கியமான ஒன்றாக இருக்கிறது. மேலும் கணினி மற்றும் அறிவியல் படித்த இளைஞர்களுக்கு தூத்துக்குடியில் அமைக்கப்படும் ராக்கெட் ஏவுதளம் மூலமாக வேலை வாய்ப்புகள் கிடைப்பதற்கான வாய்ப்புகள் இருக்கிறது என்றும், அதை இளைஞர்கள் பயன்படுத்திக் கொள்ளுங்கள் எனவும் கூறினார்.