ராசிபுரம் அருகே தண்ணீர் தொட்டி இடிந்து விழுந்ததில் பெண் உயிரிழந்துள்ளார்.
நாமக்கல் மாவட்டத்தில் உள்ள நாமகிரிப்பேட்டை அருகே நாரைக்கிணறு ஊராட்சிக்குட்பட்ட பகுதியில் ஐந்தாவது வார்டு உறுப்பினர் ரம்யாவின் கணவர் முருகன் என்பவர் அப்பகுதி மக்களின் வசதிக்காக தனது சொந்த செலவில் சில தினங்களுக்கு முன்பாக தண்ணீர் தொட்டி ஒன்றை கட்டியுள்ளார். இந்த தண்ணீர் தொட்டி பணிகள் முழுமையடையாமல் இருந்ததாக சொல்லப்படுகின்றது.
இந்த நிலையில் நேற்று நாரைக்கிணறு ஊராட்சி சார்பாக நடைபெற்று வரும் 100 நாள் வேலை வாய்ப்பு திட்டத்தில் பாப்பாத்தி மற்றும் சுப்புலட்சுமி உட்பட சிலர் வேலை செய்து கொண்டிருந்தார்கள். அப்போது தொட்டியில் தண்ணீர் நிரம்பியதாக தெரிகின்றது. அதனால் அழுத்தம் தாங்காமல் தொட்டி இடிந்து விழுந்துள்ளது. இதில் அங்கு தண்ணீர் பிடிக்க வந்த பாப்பாத்தி இடுபாடுகளில் சிக்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
மேலும் சுப்பு லட்சுமி லேசான காயமடைந்ததை தொடர்ந்து அவரை அங்கிருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்கள். இது குறித்து தகவல் அறிந்து வந்த போலீசார் பாப்பாத்தியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்கள். இதனிடையே புதிதாக கட்டப்பட்ட இந்த தண்ணீர் தொட்டி எந்தவித அனுமதியும் பெறாமல் அவரின் சொந்த விருப்பத்தின் பேரில் கட்டி கொடுத்தது தெரிய வந்திருக்கின்றது. இதையடுத்து போலீசார் இதுகுறித்து வழக்கு பதிவு செய்து ரம்யாவின் கணவர் முருகனிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றார்கள்.