இலங்கை பிரதமர் ராஜபக்சேவுடன் பிரதமர் திரு. நரேந்திர மோடி காணொலி காட்சி மூலம் நாளை ஆலோசனை நடத்த உள்ளார்.
இலங்கை பிரதமராக மீண்டும் ராஜபக்சே பொறுப்பேற்ற பிறகு முதல் முறையாக பிரதமர் திரு.நரேந்திர மோடி அவருடன் ஆலோசனை நடத்த உள்ளார். காணொளி வாயிலாக நடைபெறும் இந்த ஆலோசனையின் போது பிராந்திய ஒத்துழைப்பு இருதரப்பு விவகாரங்கள் உட்பட பல்வேறு முக்கிய விவகாரங்கள் குறித்து இரு தலைவர்களும் ஆலோசிக்க கூடும் என தெரிகிறது. இது குறித்து டுவிட்டரில் பதிவிட்ட பிரதமர் ராஜபக்சே அரசியல், பொருளாதாரம், பாதுகாப்பு, சுற்றுலா மற்றும் பரஸ்பரம் ஆர்வம் உள்ள பிற விவகாரங்கள் தொடர்பான இரு தரப்புக்கு இடையிலான பன்முக உறவை மறுபரிசீலனை செய்வதை எதிர்பார்க்கிறோம் என குறிப்பிட்டுள்ளார்.
இதற்கு பதிலளித்துள்ள பிரதமர் திரு. மோடி இரு தரப்பு நட்புறவை விரிவாக்கம் செய்ய தான் ஆர்வமாக இருப்பதாகவும். கொரோனாவுக்கு பிந்தைய காலத்தில் நமது கூட்டுறவை மேலும் மேம்படுத்துவதற்கான வழிகளை நாம் ஆராய வேண்டும் என்றும் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.