மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் அமைந்துள்ள ராஜபாளையம் விவசாயத்தையும் பஞ்சு ஆலை மற்றும் நூற்பாலைகளில் சார்ந்துள்ள நகரம். ராஜபாளையத்தின் வீரம் மிகுந்த நாய்கள் உலகம் முழுவதும் புகழ் பெற்றவைமட்டுமின்றி இந்திய ராணுவத்தில் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. ராஜபாளையம் சாம்பல் நிற அணில்கள் அதிக அளவில் காணப்படும் பகுதி ஆகும்.
ராஜபாளையம் சட்டமன்ற தொகுதியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஒருமுறையும், காங்கிரஸ் கட்சியும் சுயேச்சை வேட்பாளர்களும் தல 2முறையும் வெற்றி பெற்றுள்ளனர். அதிமுக வேட்பாளர்கள் 5 முறையும், திமுக 3 முறையும் வென்றுள்ளன. தற்போது எம் எல் ஏ திமுகவின் தங்கபாண்டியன். அதிக பெண் வாக்காளர்கள் உள்ள ராஜபாளையம் தொகுதியில் மொத்த வாக்காளர்கள் எண்ணிக்கை 2 ,38 ,701.
நீண்டகால கோரிக்கைகளான பாதாள சாக்கடை திட்டம், ரயில்வே மேம்பாலம், தாமிரபரணி கூட்டு குடிநீர் திட்டம் ஆகியவற்றுக்கு இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு அடிக்கல் நாட்டப்பட்தாலும் பணிகள் என்னவோ ஆமை வேகத்தில் தான் நடைபெற்றுவருகின்றன. மற்ற இடங்களை ஒப்பிடும்போது சாலைகள் முறையாக சீரமைக்கப்படாததால் வாகன ஓட்டிகள் சிரமப்படும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். சரக்கு வாகனங்கள் வந்து செல்வதும் சவாலாகவே உள்ளது.
எனவே சாலைகளை சீரமைக்க வேண்டும் என்பது முக்கிய கோரிக்கையாக மாறியுள்ளது. புறவழி சாலைக்காக ஆய்வுகள் தான் நடைபெறுகின்றனவே தவிர திட்டம் ஒன்றும் தயாராகவில்லை. சுகாதாரம் மற்றும் தெருவிளக்கு பிரச்சினைகளும் இருக்கத்தான் செய்கின்றன. ஒருபக்கம் நகராட்சி நிர்வாகம் செயல்படவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ள நிலையில், தனியாரிடம் விடப்பட்ட திட்டங்கள் ஒப்புதல் தாரர்களின் போக்கிலேயே மேற்கொள்ளப்படுகின்றன.
ராஜபாளையம் வழியாக செங்கோட்டை-மதுரை ரயிலை மீண்டும் இயக்க வேண்டும் என்பது மக்களின் கோரிக்கை. மக்களின் கோரிக்கைகளை பற்றிக்கூறும் தொகுதி எம்எல்ஏ தங்கபாண்டியன் நீண்டகாலம் கோரிக்கையாக இருந்த பல திட்டங்கள் தற்போது தொடங்கி நடைபெற்று வருவதாக தெரிவித்துள்ளார். கோரிக்கைகளுடன் சட்டமன்ற தேர்தளுக்காக காத்திருக்கும் ராஜபாளையம் தொகுதி மக்கள் பிரச்சினைகளுக்கு விரைவில் தீர்வு கிடைக்கும் என நம்பிக்கையுடன் உள்ளனர்.