மாரியப்பன் தங்கவேலு, கிரிக்கெட் வீரர் ரோகித் சர்மா உள்ளிட்ட 5 பேருக்கு ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
விளையாட்டுத் துறையில் சாதனை படைத்த வீரர்கள் மற்றும் வீராங்கனைகளுக்கு ஒவ்வொரு வருடமும் மத்திய அரசு ராஜீவ் கேல் ரத்னா விருது, அர்ஜுனா விருது ஆகியவற்றை வழங்கி கௌரவப்படுத்தி கொண்டிருக்கிறது. ஒவ்வொரு விளையாட்டு துறையை சேர்ந்த சங்கங்களும், அந்தத் துறைகளில் சிறப்பாக விளையாடிய நபர்களை மத்திய விளையாட்டு துறைக்கு பரிந்துரை செய்கின்றன. விருதைப் பெறுவதற்கு இவர்கள் தகுதியானவர்களா? என்பதை ஆராய்வதற்கு ஒரு குழு நியமனம் செய்யப்பட்டுள்ளது.
அந்தப் குழு கடந்த சில தினங்களுக்கு முன்னர் பாரா ஒலிம்பிக்கில் உயரம் தாண்டுதலில் தங்கப்பதக்கம் வென்ற தமிழகத்தைச் சார்ந்த மாரியப்பன் தங்கவேலு, இந்திய கிரிக்கெட் வீரர் ரோகித் சர்மா உள்ளிட்ட 5 பேர் பெயரை ராஜீவ் கேல் ரத்னா விருதுக்கு பரிந்துரை செய்துள்ளது. இந்த நிலையில் இன்று விருதுக்கான பெயர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளன. அவற்றுள், கிரிக்கெட் வீரர் ரோகித் சர்மா, பாரா ஒலிம்பிக்கில் தங்கப்பதக்கம் வென்ற மாரியப்பன் தங்கவேலு, டேபிள் டென்னிஸ் மணிகா பத்ரா, மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத், ஹாக்கி வீராங்கனை ராணி ஆகியோரின் பெயர்கள் அந்த பட்டியலில் இடம்பெற்றுள்ளன.
அதே சமயத்தில் கிரிக்கெட் வீரர் இஷாந்த் சர்மா, வீராங்கனை தீப்தி சர்மா ஆகிய இருவருக்கும் அர்ஜுனா விருது வழங்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இவர்களைத் தொடர்ந்து, வில்வித்தை வீரர் அட்னானு தாஸ், தடகள வீரர் டூட்டி சந்த், சாத்விக் சாய்ராஜ் ராங்கி ரெட்டி, சிராக் சந்திரசேகர் செட்டி, சுபேதர் மணிஷ் கவுசிக், குத்துச்சண்டை வீராங்கனை லாவ்லினா போர்கோஹைன் உள்ளிட்ட மொத்தம் 27 பேருக்கு அர்ஜூனா விருது வழங்கப்பட உள்ளது.