நாடு முழுவதும் ஸ்மார்ட்போன்களை பயன்படுத்தும் பெரும்பாலனோர் இணைய வழி பணம் பரிமாற்றும் வசதியை பயன்படுத்தி வருகிறார்கள். இதனை தங்களுக்கு சாதகமாக்கி பணம் மோசடியில் ஈடுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து உள்ளது. முதியோர், வேலை தேடும் இளைஞர்கள், இணைய விளையாட்டுகளில் ஈடுபடுவோர் ஆகியோர்களை பண மோசடி கும்பல் தங்கள் வலையில் எளிதில் விழ வைத்து ஏமாற்றுகிறார்கள். அத்தகைய கும்பல்களிடமிருந்து தப்புவதற்காக வங்கிகள் தொடர்ந்து விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறது. அதன்படி குறுஞ்செய்திகள் மூலம் அவ்வப்போது வாடிக்கையாளர்கள் பண மோசடி கும்பல் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.
மேலும் மத்திய, மாநில அரசுகளும் அத்தகைய விழிப்புணர்வு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் நிதிசார் குற்றங்களுக்கு இரையாவதை தடுக்கக்கூடிய வகையில் மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த புதுமையான திட்டத்தை இந்திய ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. ராஜூவும் 40 திருடர்களும் என்ற பெயரில் சித்திர உரையாடல் புத்தகத்தை ஆர்பிஐ வெளியிட்டுள்ளது. அதில் ராஜ் என்கின்ற நபர் எதிர்கொள்ளும் 40 வகையான முறைகேடுகள் குறித்து கதை வடிவில் கூறப்பட்டுள்ளது. ஒவ்வொரு முறைகேட்டின் இறுதியிலும் வாடிக்கையாளர் செய்ய வேண்டியவை, செய்யக்கூடாத விஷயங்களை குறித்து எடுத்துரைத்துள்ளது. அவற்றில் சிலவற்றை இங்கு நாம் பார்ப்போம்.
செய்யக்கூடாதவை
- குறுஞ்செய்தி, மின்னஞ்சலில் வரும் அறிமுகமில்லாத ‘லிங்க்’களை ஆராயாமல் தொடரக் கூடாது.
- வங்கி ஏடிஎம் அட்டை எண், பணப் பரிமாற்றத்துக்கான ரகசிய எண் (ஓடிபி) உள்ளிட்ட ரகசிய தகவல்கள் எதையும் அறிமுகம் இல்லாத நபரிடம் பகிரக் கூடாது.
- ‘வங்கியில் இருந்து பேசுகிறோம்’ என முகாந்திரம் இல்லாத கைப்பேசி எண்ணில் இருந்து வரும் அழைப்புகளை நம்பக் கூடாது.
- இணையவழி பணப் பரிவா்த்தனைக்கான ஓடிபி ரகசிய எண்ணும், யுபிஐ எண்ணும், பணத்தை அனுப்புவதற்கு மட்டுமே தேவை. மற்றவரிடமிருந்து பணத்தைப் பெறுவதற்கு அவை தேவையில்லை. எக்காரணத்தைக் கொண்டும் அந்த எண்களை மற்றவா்களிடம் தெரிவிக்கக் கூடாது.
- ஏடிஎம் அட்டையை அடையாளம் தெரியாத நபா்களிடம் வழங்கக் கூடாது. அந்த அட்டைகளில் ரகசிய எண்ணை எழுதிவைக்கக் கூடாது.
- ஏடிஎம்-களில் பணம் எடுக்க மூன்றாம் நபரின் உதவியை நாடக் கூடாது.
- குறுஞ்செய்தி, மின்னஞ்சல் வாயிலாக வரும் ‘லிங்க்’கள் மூலமாக எந்தவொரு செயலியையும் பதிவிறக்கம் செய்யக் கூடாது.
- கைப்பேசி திரையை மற்றவா்களுக்குப் பகிரும் வகையிலான செயலிகளைப் பதிவிறக்கம் செய்யக் கூடாது.
- பணத்தை அனுப்புவதற்கு மட்டுமே ‘க்யூஆா் கோட்’ அவசியம். மற்றவரிடம் இருந்து பணத்தைப் பெறுவதற்கு க்யூஆா் கோடை ஸ்கேன் செய்ய வேண்டிய அவசியமில்லை.
- கைப்பேசி எண், மின்னஞ்சல் முகவரி, நண்பா்களின் விவரங்கள் உள்ளிட்டவற்றை சமூக வலைதளங்கள் உள்ளிட்ட பொது இடங்களில் வெளிப்படையாகப் பகிா்தல் கூடாது.
- ‘பரிசு பெற்றுள்ளீா்கள்‘, ‘வேலை கிடைத்துவிட்டது’ என்பன போன்ற குறுஞ்செய்திகளையும், மின்னஞ்சல்களையும் ஒருபோதும் நம்பக் கூடாது.
- வேலை வேண்டுமெனில் இவ்வளவு தொகை செலுத்த வேண்டும் என்று கூறும் நபா்களை நம்பி ஏமாறக் கூடாது.
- பாதுகாப்பில்லாத வலைதளங்கள் வாயிலாகப் பணப் பரிவா்த்தனையை மேற்கொள்ளக் கூடாது.
- வங்கி அதிகாரிகள் எனக் கூறிக்கொண்டு வரும் நபா்களின் அடையாள அட்டையை உறுதி செய்யாமல் எந்தவிதப் பணப் பரிவா்த்தனையையும் மேற்கொள்ளக் கூடாது.
- அரசு சேவைகளையும், மானியங்களையும் பெறுவதற்குப் பணம் செலுத்த வேண்டும் என்று வரும் அழைப்புகளையும் குறுஞ்செய்திகளையும் நம்பக் கூடாது.
- வீட்டில் இருந்தே வேலை என்று வரும் குறுஞ்செய்திகளையும் மின்னஞ்சல்களையும் நம்பக் கூடாது.
- வேலை உள்ளிட்டவை சாா்ந்த இணையவழி ஒப்பந்தங்களில் வழக்குரைஞரின் ஆலோசனையின்றி கையொப்பமிடக் கூடாது.
- வங்கிக் கடன் உள்ளிட்டவற்றைப் பெறுவதற்குப் பணம் செலுத்த வேண்டிய அவசியமில்லை.
செய்யவேண்டியவை
- கேஒய்சி விவரங்களைப் புதுப்பித்தல் தொடா்பான குறுஞ்செய்திகளின் உண்மைத்தன்மையை வங்கி அதிகாரிகளிடம் ஆலோசித்து முடிவெடுக்க வேண்டும்.
- பணமோசடி முயற்சி குறித்து அருகில் உள்ள இணையவழி குற்றத் தடுப்பு காவல் நிலையத்தில் புகாா் அளிக்க வேண்டும்.
- இணையவழி பணப் பரிவா்த்தனையின்போது வங்கிக் கணக்கு எண், யுபிஐ எண் உள்ளிட்டவற்றைச் சரிபாா்த்துக் கொள்வது அவசியம்.
- உங்கள் வங்கிக் கணக்கிலிருந்து பணம் மோசடி செய்யப்பட்டிருப்பது தெரியவந்தால், உடனடியாக வங்கியைத் தொடா்புகொண்டு தகவல் தெரிவிக்க வேண்டும். விரைந்து வங்கிக் கணக்கை முடக்குவதன் வாயிலாக கூடுதல் நிதியிழப்பைத் தடுக்க முடியும்.
- கைப்பேசியின் சிம் காா்டு தொலைந்துவிட்டால், உடனடியாக சம்பந்தப்பட்ட தொலைத்தொடா்பு நிறுவனத்தைத் தொடா்புகொண்டு அந்த எண்ணை முடக்க வேண்டும்.
- இணைவழியில் பொருள்களை வாங்கும்போது, விற்பனையாளரின் நம்பகத்தன்மையை உறுதிசெய்து கொள்வது அவசியம். நம்பகமில்லா விற்பனையாளரிடம் முன்பணம் செலுத்தக் கூடாது.
- வேலைவாய்ப்பு வழங்கும் நிறுவனத்தை நேரடியாகத் தொடா்பு கொண்டு வேலைவாய்ப்பு குறித்த தகவல்களை உறுதி செய்துகொள்ள வேண்டும்.
- பாதுகாப்பான வலைதளங்களில் இருந்து மட்டுமே பொருள்களை வாங்க வேண்டும்.
- பாதுகாப்பான ‘வைஃபை’ இணையவசதியை மட்டுமே பயன்படுத்த வேண்டும்.