Categories
மாநில செய்திகள்

ராஜேந்திர பாலாஜி எழுதிய கடிதம்…..!! விசாரணையில் பரபரப்பு….!!

அதிமுக ஆட்சியில் பால்வளத்துறை அமைச்சராக இருந்த ராஜேந்திர பாலாஜி உள்ளிட்டோருக்கு எதிராக, அரசு வேலை வாங்கி தருவதாக ரூ.3 கோடி மோசடி செய்ததாக புகார் அளிக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் பல்வேறு பிரிவுகளின் கீழ் ராஜேந்திர பாலாஜி மற்றும் அவரது உதவியாளர்கள் மீது வழக்குப்பதிவு செய்தனர். இதையடுத்து ராஜேந்திர பாலாஜி முன்ஜாமீன் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார். அந்த மனு தள்ளுபடி செய்யப்பட்டதை தொடர்ந்து, அவர் கடந்த டிசம்பர் மாதம் 17ஆம் தேதி தலைமறைவானார். தொடர்ந்து பல நாட்களாக தலைமறைவாக இருந்த ராஜேந்திர பாலாஜியை கர்நாடக மாநிலம் ஹசனில் தனிப்படை போலீசார் கடந்த 5ஆம் தேதி கைது செய்தனர். பின்னர், தமிழ்நாட்டுக்கு அழைத்து வரப்பட்டு ராஜேந்திர பாலாஜி திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

இந்த வழக்கில் ஜாமீன் கேட்டு ராஜேந்திர பாலாஜி உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார். அதனை விசாரித்த உச்ச நீதிமன்றம், வழக்கு விசாரணைக்கு ஒத்துழைக்க வேண்டும், பாஸ்போர்ட்டை சம்பந்தப்பட்ட நீதித்துறை நடுவரிடம் ஒப்படைக்க வேண்டும், வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ள காவல் நிலைய எல்லையைத் தாண்டி பயணிக்கக்கூடாது, விசாரணை நீதிமன்றம் விதிக்கும் நிபந்தனைகளை ஏற்க வேண்டும் என்பன உள்ளிட்ட நிபந்தனைகளுடன் அவருக்கு 4 வார காலத்திற்கு இடைக்கால ஜாமீன் வழங்கியது.இதையடுத்து, திருச்சி மத்திய சிறையில் இருந்து கடந்த 2 தினங்களுக்கு முன் ராஜேந்திர பாலாஜி வெளியே வந்தார்.

தொடர்ந்து, ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள சிறப்பு நீதிமன்றத்தில் அவரது பாஸ்போர்ட்டை அவரது வழக்கறிஞர் ஒப்படைத்தார். மேலும், உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி விசாரணைக்கு எப்போது அழைத்தாலும் நேரில் ஆஜராகி விசாரணைக்கு ஒத்துழைப்பு தருவதாக ராஜேந்திர பாலாஜி தரப்பில் அவரது வழக்கறிஞர் விருதுநகர் மாவட்டக் குற்றப்பிரிவு அலுவலகத்தில் கடிதம் தாக்கல் செய்துள்ளார்.முன்னதாக, வேலைவாங்கி தருவதாக ரூ.30 லட்சம் மோசடி செய்ததாக ரவீந்திரன் என்பவர் அளித்த புகாரில் விஜய நல்லதம்பி என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். விஜய நல்லதம்பி கொடுத்த ரூ.3 கோடி மோசடி புகாரில்தான் ராஜேந்திர பாலாஜி கைதாகி சிறை சென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |