ஆவின் மற்றும் அரசு துறைகளில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி பல நபர்களிடம் 3 கோடி ரூ வரை மோசடி செய்ததாக பால்வளத் துறை முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி மீது விருதுநகர் மாவட்டக் குற்றப் பிரிவு காவல்துறையினர் நவ.15-ம் தேதி வழக்குப்பதிவு செய்தனர். சென்னை ஐகோர்ட்டில் கே.டி.ராஜேந்திரபாலாஜி தாக்கல் செய்த முன்ஜாமீன் மனு டிச.17-ம் தேதி தள்ளுபடி செய்யப்பட்டது. இதனையடுத்து குற்றப்பிரிவு காவல்துறையினர் 8 தனிப் படைகள் அமைத்து அவரை வலைவீசி தேடி வந்தனர்.
இதையடுத்து கர்நாடகாவில் பதுங்கியிருந்த முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜியை சிறப்பு தனிப்படை காவல்துறையினர் அதிரடியாக கைது செய்தனர். அதன்பின் முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜியை வரும் 20-ம் வரை நீதிமன்ற காவலில் வைக்க மதுரை உயர்நீதிமன்ற கிளை உத்தரவு பிறப்பித்தது. இதனைதொடர்ந்து மதுரை மத்திய சிறைக்கு முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி அழைத்து வரப்பட்டார்.
அதன்பின் பாதுகாப்பு காரணங்களுக்காக மதுரை சிறையில் இருந்து திருச்சி மத்திய சிறைக்கு ராஜேந்திர பாலாஜி மாற்றம் செய்யப்பட்டார். இந்நிலையில் இது தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு பதில் மனு தாக்கல் செய்துள்ளது. அதில், ராஜேந்திர பாலாஜிக்கு ஜாமீன் வழங்கக்கூடாது. அவர் மீது தமிழக அரசுக்கு எந்த அரசியல் காழ்ப்புணர்ச்சியும் இல்லை என்று குறிப்பிடப்பட்டுள்ளது.