தமிழகம், கர்நாடகா உள்ளிட்ட 15 மாநிலங்களில் உள்ள 57 எம்பிக்களின் பதவிக்காலம் முடிவடைய உள்ளது. இதையடுத்து அந்த இடங்களை நிரப்ப ஜூன் 10ஆம் தேதி ராஜ்யசபா தேர்தல் நடைபெற உள்ளது. அதன்படி தமிழகத்தில் 6 மாநிலங்களவை உறுப்பினர்கள் இடம் காலியாக உள்ளது. அதில் தற்போது உள்ள சட்டமன்ற உறுப்பினர்கள் அடிப்படையில் பார்த்தால் திமுகவிற்கு 4 எம்பிக்கள் மற்றும் அதிமுகவிற்கு 2 எம்பிக்கள் கிடைக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
இதையடுத்து திமுக சார்பாக கிரிராஜன், கே.ஆர்.என் ராஜேஷ் குமார், தஞ்சை கல்யாணசுந்தரம் ஆகியோரை திமுகவின் பொதுச்செயலாளர் துரைமுருகன் வேட்பாளராக அறிவித்து உள்ளார். அதில் ஒரு இடம் கூட்டணி கட்சியான காங்கிரசுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இதனிடையே அதிமுக சார்பாக யார் வேட்பாளராக களம் இறங்கப் போகிறார் என்ற எதிர்பார்ப்பு எழுந்தது. அதற்கு காரணம் இரட்டைத்தலைமை கொண்ட அதிமுக தான். எந்த தேர்தலாக இருந்தாலும் வேட்பாளர்களை முந்திக்கொண்டு உடனே அறிவிக்கும் அதிமுக, தற்போது மாநிலங்களவை தேர்தலில் வேட்பாளர்களை தேர்வு செய்ய முடியாமல் தவித்து வந்தது.
அதற்கு முக்கிய காரணம் இரட்டை தலைமை,முக்குலத்தோர் மற்றும் வன்னியர் இடையேயான போர் என்று பல்வேறு தகவல்கள் வெளிவந்தது. இதையடுத்து ஐந்து பேர்கொண்ட ஒரு பட்டியல் தயாரிக்கப்பட்டு கடந்த 19ஆம் தேதி வழிகாட்டுதல் குழு ஆலோசனை கூட்டம் தலைமை அலுவலகத்தில் நடந்தது. அந்தப் பட்டியலில் முன்னாள் அமைச்சர்கள் ஜெயக்குமார், முதுகுளத்தூர் ஒன்றிய செயலாளர் தர்மர், சிவி சண்முகம்,முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மற்றும் நெல்லை மாவட்ட செயலாளர் கணேசராஜா ஆகியோர் பெயர்கள் குறிப்பிடப்பட்டிருந்தன.
இதில் ஓபிஎஸ் தரப்பிலிருந்து சையது கான் மற்றும் தர்மர் பெயர் முன்மொழியப்பட்டு இருந்தது. ஆனால் சசிகலாவிற்கு ஆதரவாக சையது கான் செயல்பட்டு வருவதாக குற்றச்சாட்டு உள்ளதால் , அவரைத் தேர்வு செய்தால் பல்வேறு விமர்சனங்களை சந்திக்க நேரிடும் என்பதை கருத்தில் கொண்டு முக்குலத்தோர் சமூகத்தைச் சேர்ந்த வரும் ஓபிஎஸ் தீவிர ஆதரவாளருமான தர்மரை தேர்வு செய்துள்ளனர். அதனைப் போலவே இபிஎஸ் தரப்பில் முன்னாள் அமைச்சர்கள் சிவி சண்முகம் மற்றும் ஜெயக்குமார் இடையே கடும் போட்டி நிலவியது.
அப்போது சிவி சண்முகம் ஜெயக்குமாரிடம் தனியாக பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். அதில் எம்பி சீட்டை விட்டு கொடுப்பதாக ஜெயக்குமார் கூறியுள்ளார். அதுமட்டுமல்லாமல் சிபி சண்முகத்திற்கு எம்பி சீட் கொடுப்பதன் மூலமாக வன்னியர்களின் வாக்குகளை தக்க வைத்துக் கொள்ள முடியும் என திட்டமிடப்பட்டுள்ளது. அதேசமயம் அதிமுக தற்காலிக அவைத் தலைவராக தற்போது உள்ள தமிழ்மகன் உசேன் பதவிக்கு ஜெயக்குமாரை நியமித்து அவரை திருப்திப்படுத்த வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது.