கர்நாடகாவில் இருந்து ராஜ்யசபா எம்பியாக காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியின் மகள் பிரியங்காவை தேர்ந்தெடுப்பதற்கு கட்சிக்குள் கோரிக்கை எழுந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழகம், கர்நாடகா உள்ளிட்ட 15 மாநிலங்களில் உள்ள 57 என்று எம்பிகளின் பதவிக்காலம் முடிவடைய உள்ளது. இதையடுத்து அந்த இடங்களை நிரப்ப ஜூன் 10ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. அதில் கர்நாடக மாநிலத்தில் 4 ராஜ்யசபா இடங்கள் காலியாக உள்ளன.
அதில் கட்சியின் பொதுச் செயலாளரும் சோனியாவின் மகளுமான பிரியங்காவை போட்டியின்றி தேர்வு செய்வதற்கு கர்நாடக மாநிலத்தில் காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவகுமார் கோரிக்கை விடுத்து வருகிறாராம். இதுதொடர்பாக அலைப்பேசி மூலமாகவும் ராஜஸ்தானில் நடந்த காங்கிரஸ் சிந்தனையாளர்கள் கூட்டத்திலும் இதுதொடர்பாக அவர் சோனியா காந்தியிடம் பேசியுள்ளார். ஆனால் இதனை பிரியங்கா ஏற்க மறுப்பதாக கூறப்படுகிறது.
அதுமட்டுமல்லாமல் ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள் மூவரும் எம்பி பதவி வகிப்பது என்பது பாஜகவின் குடும்ப அரசியல் பிரசாரத்திற்கு மேலும் வலு சேர்க்கும் விதமாக இருப்பதாகவும் கூறப்படுகிறது. இருந்தாலும் இன்னும் சில நாட்களில் இது தொடர்பாக கட்சி தலைமை முடிவெடுக்கும் என்று காங்கிரஸ் கட்சி தலைவர்கள் கூறியுள்ளனர். அதுமட்டுமல்லாமல்கர்நாடகாவில் 3 வேட்பாளர்களை அறிவிக்க இருந்த பாஜக தற்போது நான்கு வேட்பாளர்களை அறிவிக்கும் முடிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.