ராட்சத குழாயில் ஏற்பட்ட உடைப்பு காரணமாக சாலையில் கழிவு நீர் பெருக்கெடுத்து ஓடியது.
சென்னை மாவட்டத்தில் அம்பத்தூர், கொரட்டூர், திருமங்கலம், கோயம்பேடு, மாதவரம், முகப்பேர், கொளத்தூர் ஆகிய பகுதிகளில் இருந்து வரும் கழிவுநீர் கொடுங்கையூர் சுத்திகரிப்பு நிலையத்திற்கு ராட்சத குழாய் மூலம் அனுப்பி வைக்கப்படுகின்றது. இந்த ராட்சத குழாய் பாடி, மாதவரம் மற்றும் மூலக்கடை வழியாக செல்லும். இந்த நிலையில் ராட்சத குழாய் அமைந்துள்ள பகுதியான தாதங்குப்பதில் நேற்று காலை 11 மணியளவில் திடீரென உடைப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் வெளியேறிய கழிவுநீர் சாலையில் சுமார் 6 அடி உயரத்திற்கு சீறிப்பாய்ந்து ரெட்டேரி-பாடி சாலையில் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் மிகுந்த சில சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.
இது குறித்து தகவல் அறிந்த சென்னை குடிநீர் மற்றும் கழிவு நீர் அகற்று வாரியத்தின் ஊழியர்கள் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து கழிவுநீர் வால்வை அடைத்து சாலையில் கழிவுநீர் வெளியேறுவதை தடுத்து நிறுத்தியுள்ளனர். அதன் பின் ராட்சத குழாயில் ஏற்பட்ட உடைப்பை சரி செய்துள்ளனர். இந்த உடைப்பிற்கான காரணம் குறித்து அதிகாரிகள் கூறியதாவது “ராட்சத குழாய் அமைந்துள்ள சாலை வழியாக அதிக பாரத்தை ஏற்றுக் கொண்டு கனரக வாகனம் சென்றுள்ளது. இதன் பாரம் தாங்காமல் சாலையின் அடியில் உள்ள ராட்சத குழாயில் உடைப்பு ஏற்பட்டுள்ளது. இதனால்தான் கழிவு நீர் வெளியே இருக்கலாம்” என அவர்கள் கூறியுள்ளனர்.