மகாராணி 2-ம் எலிசபெத்தின் இறுதிச்சடங்கு இன்று (திங்கட்கிழமை) நடைபெறுகின்றது. இதில் கலந்துகொள்ளுமாறு உலக நாடுகளின் மன்னர்கள், ராணிகள், ஜனாதிபதிகள், பிரதமர்கள் என 500 தலைவர்களுக்கும், மிக முக்கிய பிரமுகர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டது. இறுதிச்சடங்குக்காக அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன், இந்திய ஜனாதிபதி திரவுபதி முர்மு உள்ளிட்ட உலக தலைவர்கள் லண்டன் நகரில் நேற்று முன்தினம் முதல் குவிந்து வருகின்றனர். அவர்களுக்கு பக்கிங்ஹாம் அரண்மனையில் மன்னர் சார்லஸ் நேற்று வரவேற்பு அளித்தார். அதில் ஜனாதிபதி ஜோ பைடன் கலந்து கொண்டார்.
இதற்கு முன்னதாக அவர் வெஸ்ட்மின்ஸ்டர் மண்டபத்தில் ராணிக்கு அமெரிக்காவின் சார்பில் அஞ்சலி செலுத்தினார். அதன் பின் அவர் கூறியதாவது, “2- ம் எலிசபெத் மகாராணி தனது தாயை நினைவுபடுத்தியதாக” அவர் ஊடக அறிக்கை ஒன்றில் தெரிவித்தார். அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் கூறியதாவது, “மக்களை கண்ணியமாக நடத்துவது எப்படி என்பதை தான் மகாராணி எலிசபெத் காட்டியுள்ளார். அமெரிக்க நாட்டின் மக்களின் இதயங்கள் ராணியின் பிரிவால் வாடும் இங்கிலாந்தில் உள்ள அனைத்து மக்களுக்கும் அனுதாபம் கொள்கின்றன. 70 ஆண்டுகளாக அவரை மகாராணியாகப் பெற்ற நீங்கள் அதிர்ஷ்டசாலிகள்… நாம் அனைவரும் உட்பட” என்று அவர் கூறினார்.