ராணுவ மந்திரி ராஜ்நாத் சிங் தலைமையில் பாதுகாப்பு தளவாட கொள்முதல் கவுன்சிலிங் கூட்டம் நேற்று நடைபெற்றுள்ளது. அதில் இந்திய ராணுவத்திற்கு 28,732 கோடி மதிப்புள்ள ராணுவ சாதனங்கள் மற்றும் ஆயுதங்கள் கொள்முதல் செய்ய ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. கிழக்கு லடாக்கில் சீனாவுடன் இரண்டு வருடங்களுக்கு மேலாக மோதல் போக்கு நீடித்து வருகின்ற நிலையில் இந்த முடிவு எடுக்கப்பட்டிருக்கிறது.
மேலும் ட்ரோன்கள், சிறு துப்பாக்கிகள், குண்டு துளைக்காத சட்டைகள் போன்றவையும் கொள்முதல் செய்யப்படும் பொருட்களில் அடங்கும். இந்த முடிவு சிறு ஆயுதங்கள் உற்பத்தி தொழிலுக்கு பெருமளவு ஊக்கம் அளிக்கும் என ராணுவ அமைச்சகம் தெரிவித்துள்ளது. எல்லை கட்டுப்பாட்டு கோடு பகுதியிலும் பயங்கரவாதிகளுக்கு எதிரான வேட்டைகளிலும் எதிரிகளால் ஆபத்து இருப்பதால் ராணுவத்தின் பாதுகாப்பு கருதி குண்டு துளைக்காத உடை வாங்கப்படுவதாகவும் ராணுவ அமைச்சகம் கூறியுள்ளது.