பயங்கரவாதிகள் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் 11 குழந்தைகள் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது
ஆப்கானிஸ்தான் நாட்டில் அரசுக்கும் தலிபான் பயங்கரவாதிகளுக்கும் பல வருடங்களாக உள்நாட்டு போர் நிகழ்ந்து வருகிறது. இரண்டு தரப்பினர் இடையே பேச்சுவார்த்தை நடந்தாலும் ஒருவருக்கொருவர் அவ்வப்போது தாக்கி கொள்கின்றனர். அவ்வகையில் ஆப்கானிஸ்தான் தாஹர் மாகாணத்திலுள்ள பஹர்க் மாவட்டத்தில் பாதுகாப்பு படையினர் மீது தலிபான் பயங்கரவாதிகள் துப்பாக்கிச்சூடு தாக்குதல் நடத்தினர். அதோடு வெடிகுண்டுகளை வீசினர்.
தலிபான் பயங்கரவாதிகளின் இந்த தாக்குதலில் பாதுகாப்பு வீரர்கள் 40 பேர் மரணம் அடைந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் பாதுகாப்பு படையினர் மீது தாக்குதல் மேற்கொண்ட பயங்கரவாதிகள் மசூதியில் மறைந்து இருப்பதாக ஆப்கானிஸ்தான் அரசுக்கு தகவல் கிடைத்துள்ளது. அதனை தொடர்ந்து ஆப்கானிஸ்தான் அரசு வான்வழித் தாக்குதலை மேற்கொண்டது.
அரசு அதிகாரிகளின் தாக்குதலை முன்னதாகவே அறிந்த பயங்கரவாதிகள் அவ்விடத்தை விட்டு தப்பிச் சென்றதாகவும், நடைபெற்ற தாக்குதலில் 11 குழந்தைகள் உயிரிழந்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது. கடந்த ஒரு வாரமாக தலிபான் பயங்கரவாதிகளுக்கும் அரசுக்கும் இடையே ஏற்படும் மோதலில் நூற்றுக்கும் அதிகமான பொதுமக்கள் உயிரிழந்ததாக தகவல் கிடைத்துள்ளது.