பண மோசடி குறித்த வழக்கில் காவல்துறையினர் மேற்கு ஆப்பிரிக்கா நாட்டை சேர்ந்த நபரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தேனி மாவட்டம் கம்பம் பகுதியில் உள்ள பாரதியார் நகரில் அதிஷ்டராஜா என்பவர் வசித்து வந்துள்ளார். முன்னாள் ராணுவ வீரரான இவர் எண்ணை தயாரித்து விற்பனை செய்யும் தொழிலும், பாமாயில் நிறுவனத்தின் விற்பனையாளராகவும் இருந்து வருகிறார். இந்நிலையில் அதிஷ்டராஜா தனது நிறுவனத்தின் பெயரில் பாமாயில் விற்பனை செய்ய சமூக வலை தளங்களில் விளம்பரம் செய்துள்ளார். இதனை பார்த்து மர்ம நபர் ஒருவர் அதிஷ்டராஜாவை மின்னஞ்சல் மூலம் தொடர்பு கொண்டு பேசியுள்ளார். அப்போது அதிஷ்டராஜாவிடம் நான் மலேசியாவில் இருந்து 50டன் பாமாயில் கன்டெய்னரில் அனுப்பி வைப்பதாக ஆசை வார்த்தை கூறியுள்ளார்.
இதனை நம்பிய அதிஷ்டராஜா அந்த நபர் அனுப்பிய வங்கி கணக்கிற்கு பல்வேறு தவணை மூலம் மொத்தம் 60 லட்சத்து 45 ஆயிரம் ரூபாயை அனுப்பியுள்ளார். இதனைதொடர்ந்து அவர் பாமாயிலும் அனுப்பவில்லை, அந்த நபரையும் தொடர்பு கொள்ள முடியவில்லை. மேலும் தான் மோசடி செய்யப்பட்டதை அறிந்து அதிர்ச்சியடைந்த அதிஷ்டராஜா உடனடியாக தேனி சைபர் கிரைம் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் அந்த மர்ம நபரின் வங்கிகணக்கை வைத்து தீவிர விசாரணை நடத்தியுள்ளனர்.
அப்போது அந்த நபர் டெல்லி துவாரகா பகுதியில் வசிக்கும் ஆர்தர் சில்வஸ்டர் கேவ்மே என்பது தெரியவந்துள்ளது. இதனையடுத்து தனிப்படையினர் டெல்லிக்கு சென்று ஆர்தர் சில்வஸ்டர் கேவ்மேவை கைது செய்து விசாரணை நடத்தியுள்ளனர். அந்த விசாரணையில் அவர் மேற்கு ஆப்பிரிக்காவை சேர்ந்தவர் என்பது இந்த மோசடியில் சிலருக்கு தொடர்பு உள்ளதும் தெரியவந்துள்ளது. இந்நிலையில் காவல்துறையினர் ஆர்தர் சில்வஸ்டர் கேவ்மேவை நேற்று தேனிக்கு அழைத்து வந்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் அவரிடம் இருந்து காலாவதியான பாஸ்போர்ட் மற்றும் சில ஆவணகளை பறிமுதல் செய்துள்ளனர்.