மூச்சு திணறல் ஏற்பட்டு உயிரிழந்த ராணுவ அதிகாரியின் உடலை 7 குண்டுகள் முழங்கி அடக்கம் செய்துள்ளனர்.
தேனி மாவட்டம் கடமலைக்குண்டு அடுத்துள்ள கோவில்பாறை கிராமத்தில் முத்தையா என்பவர் வசித்து வந்துள்ளார். ராணுவ வீரரான இவருக்கு ஆறுமுகவள்ளி என்ற மனைவியும் 2 மகள்களும் உள்ளனர். இந்நிலையில் முத்தையா இமாச்சலபிரதேசத்தில் இந்தோ-திபெத் காவல்படை பிரிவில் பணியாற்றி வந்த முத்தையாவுக்கு கடந்த இரு தினங்களுக்கு முன்பு மூச்சுத்திணறல் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் முத்தையா சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
இதனை தொடர்ந்து அவரது உடல் டெல்லியில் இருந்து விமானம் மூலம் மதுரைக்கு அதிகாரிகள் அனுப்பி வைத்துள்ளனர். அதற்கு பின்னர் அங்கிருந்து ஆம்புலன்ஸ் மூலம் அவரது சொந்த ஊரான கோவில்பாறைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் அவரது உடலுக்கு தெற்கு மாவட்ட தி.மு.க. பொறுப்பாளரும், எம்.எல்.ஏவான கம்பம் ராமகிருஷ்ணன், மகாராஜன் எம்.எல்.ஏ., கடமலை-மயிலை ஒன்றிய செயலாளர்கள் சுப்பிரமணி, தங்கபாண்டி, மாவட்ட பொதுக்குழு உறுப்பினர் மற்றும் கிராம மக்கள் முத்தையாவின் உடலுக்கு அஞ்சலி செலுத்தியுள்ளனர். அப்போது இந்தோ-திபெத் காவல் படை பிரிவு அதிகாரிகள் 7 துப்பாக்கி குண்டுகள் முழங்கி முத்தையாவின் உடலை அடக்கம் செய்துள்ளனர்.