ராதாபுரம் தொகுதியில் மலர் விவசாயமும், மீன் பிடித்தலும் முக்கிய தொழில்களாக உள்ளன. கூடங்குளம் அணுமின் நிலையம் மற்றும் இஸ்ரோவின் உந்தும வளாகம் ஆகியவை இங்கு அமைந்துள்ளன. திராவிட மொழிக்கு ஒப்பிலக்கணம் எழுதி தமிழ் மொழிக்கு பெரும் பங்காற்றிய கால்டுவெல் வாழ்ந்து மறைந்த உடன்குடி இந்த தொகுதியில் தான் உள்ளது. ராதாபுரம் சட்டமன்ற தொகுதியில் காங்கிரஸ் 5 முறை வெற்றி பெற்றுள்ளது.
திமுக, அதிமுக, காந்தி காமராஜ், தேசிய காங்கிரஸ் கட்சிகள் தலா 2 முறை தொகுதியை கைப்பற்றியுள்ளனர். தாமக, தேமுதிக மற்றும் சுயேச்சை வேட்பாளர் தலா 1 முறை வெற்றி பெற்றுள்ளனர். தற்போதைய எம்எல்ஏ அதிமுகவின் இன்பதுரை. ராதாபுரம் தொகுதியின் மொத்த வாக்காளர்கள் எண்ணிக்கை 2,69,874 ஆகும். ராதாபுரம் தொகுதியில் விளைவிக்கப்படும் மலர்களை விற்பனை செய்வதற்காக திமுக ஆட்சியில் காவல்கிணறு பகுதியில் கட்டப்பட்ட மலர் வணிக வளாகம் செயல்படாமல் உள்ளது.
மலர் வணிக வளாகம் மீண்டும் செயல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதும், பேருந்து நிலையம் ஏற்படுத்த வேண்டும் என்பதும் அப்பகுதியினர் கோரிக்கை. காற்றாலை மூலம் பெறப்படும் மின்சாரத்தை கொண்டு செல்வதற்கான வழிதடங்கள் முறையாக பராமரிக்கப்பட வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்துகின்றனர். பெருமணல் தூண்டில் வளைவு பாலத்தின் நீளத்தை நீட்டித்து தர வேண்டும் என மீனவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
வள்ளியூர் ரயில்வே மேம்பால பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என்றும் மக்கள் தெரிவிக்கின்றனர். கூடங்குளம் அணு உலைக்கு எதிரான போராட்டம் தொடர்பான வழக்குகள் காரணமாக இளைஞர்களின் வேலைவாய்ப்பு கேள்விக்குறியாக இருப்பதாகவும் மக்கள் வேதனை தெரிவிக்கின்றனர். நிறைவேறாத வாக்குறுதிகள், நீண்டகால எதிர்ப்பார்ப்புகள் ஆகியவற்றுடன் தேர்தலை எதிர்கொள்ள ராதாபுரம் தொகுதி மக்கள் தயாராகி வருகின்றனர்.