டெல்லியிலுள்ள எய்ம்ஸ் நிறுவனத்தின் இணையதளம் சென்ற நவ..23ம் தேதி இணைய திருடர்களால் தாக்குதலுக்கு உள்ளாகி, அதன் சா்வா்கள் முடங்கியது. இதுகுறித்து மிரட்டி பணம்பறித்தல் மற்றும் இணையதள பயங்கரவாதம் ஆகிய பிரிவுகளின் கீழ் சென்ற நவ..25ம் தேதி சைபா் குற்றப்பிரிவில் வழக்குபதிவு செய்யப்பட்டது. இத்தாக்குதலை அடுத்து புலனாய்வு அமைப்புகளின் பரிந்துரைகளின் அடிப்படையில் இணையதள சேவைகள் முடக்கப்பட்டது. மத்திய அரசின் சொ்ட்-இன் என்ற இந்திய கணினி அவசரநிலை நடவடிக்கைக் குழு, டிஆா்டிஓ, மத்திய புலனாய்வுத் துறை , சிபிஐ, என்ஐஏ ஆகிய முகமைகளும் விசாரணையை மேற்கொண்டது.
இதையடுத்து எய்ம்ஸின் இ-மருத்துவமனை சா்வா்களின் தகவல்கள் சென்ற வாரம் மீட்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனா். அத்துடன் வைரஸால் பாதிக்கப்பட்ட சா்வா்கள், கணினிகள் முழுமையாக ஸ்கேன் செய்யப்பட்டு தயார்செய்யப்பட்டு இருக்கிறது. இத்தாக்குதலுக்கு”ரான்சம்வோ் கணினி வைரஸ்” காரணமாக இருந்துள்ளது என கூறப்படுகிறது. இந்த நிலையில் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் முடக்கப்பட்ட 5 இணைய சா்வா்களானது பத்திரமாக மீட்கப்பட்டது. மேலும் இதன் பின்னணியில் சீனாவை சேர்ந்த ஹேக்கர்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
இதுபற்றி மத்திய சுகாதார மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம் தரப்பில் விளக்கமளிக்கப்பட்டுள்ளது. அவற்றில், எய்ம்ஸ் டெல்லி சர்வர்களை சீனா ஹேக் செய்து இருப்பதாக கூறப்பட்டுள்ளது. மொத்தம் உள்ள 100 சர்வர்களில், இப்போது 5 சர்வர்கள் வெற்றிகரமாக மீட்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இதன் வாயிலாக பெரிய அளவிலான பாதிப்பு கட்டுப்படுத்தப்பட்டு உள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. இந்த 5 சர்வர்களில் இருக்கும் தகவல்களும் பத்திரமாக மீட்கப்பட்டுவிட்டது.
அதேநேரம் நோயாளிகள் மருத்துவா்களுடான சந்திப்பிற்கான இணையபதிவு வசதி, அத்தியாவசியமான மருத்துவ பிரிவுகளின் சா்வா்கள் இன்னும் செயல்பட துவங்கப்படவில்லை. ஆய்வக சேவைகளானது காகித வழியிலான முறையில் இயங்குகிறது என எய்ம்ஸ் நிர்வாகம் தெரிவித்து உள்ளது. சர்வர்கள் மீட்கப்பட்டதன் வாயிலாக வெளி நோயாளிகள் பிரிவு பதிவு மற்றும் சோ்க்கை செயல்முறைகள் சென்ற திங்கள்கிழமை முதல் இணையமுறையில் கொண்டுவரப்பட்டது.