Categories
மாநில செய்திகள்

“ராமஜெயம் கொலை வழக்கு பற்றி”…. துப்பு சொன்னால் 50 லட்சம் கொடுப்பாங்க…. சிபிசிஐடி வெளியிட்ட போஸ்டர்…..!!!!

அமைச்சர் கே.என்.நேருவின் உடன் பிறந்த சகோதரர் தொழில் அதிபர் ராமஜெயம் ஆவார். இவர் சென்ற 2012-ம் வருடம் மார்ச் 29ல் நடைபயிற்சி சென்ற போது கொலை செய்யப்பட்டார். இதையடுத்து அவரது உடல் திருச்சி -கல்லணை சாலையில் கை கால்கள் கட்டப்பட்ட நிலையில் கண்டுபிடிக்கப்பட்டது. அந்த சமயத்தில் முதலமைச்சராக இருந்த ஜெயலலிதா, ராமஜெயத்தை படுகொலை செய்த குற்றவாளிகளை உடனே கைதுசெய்ய வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்தார். அந்த வகையில் திருச்சி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். அந்த விசாரணையில் ராமஜெயத்தை ரவுடிகள் சிலர் கடத்திச்சென்று படுகொலை செய்தது தெரியவந்தது. இச்சம்பவத்தில் ஈடுபட்ட குற்றவாளிகளை பிடிக்க காவல்துறையினர் தமிழகம் முழுதும் தேடுதல் வேட்டை நடத்தினர்.

எனினும் எத்தகவலும் கிடைக்காத சூழ்நிலையில் இந்த வழக்கு சிபிசிஐடி காவல்துறையினர் வசம் சென்றது. அதன்பின் சிபிசிஐடி காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில், வழக்கை சிபிஐயிடம் ஒப்படைக்ககோரி ராமஜெயம் மனைவி லதா, உயர்நீதிமன்றம் மதுரை கிளையில் மனுதாக்கல் செய்தார். எனினும் கொலையாளிகள் பிடிபடாத சூழ்நிலையில், இந்த கொலை வழக்கை சிபிஐக்கு மாற்றி உத்தரவிட்ட உயர்நீதிமன்ற மதுரைக்கிளை விசாரணை அறிக்கையை 3 மாதத்தில் தாக்கல் செய்ய வேண்டும் எனவும் உத்தரவு பிறப்பித்திருந்தது. சிபிஐ விசாரணையில் எந்தஒரு முன்னேற்றமும் ஏற்படாததால் வழக்கை மாநில காவல்துறையே விசாரிக்க வேண்டும் என்று ராமஜெயத்தின் சகோதரர் என்.ரவிச்சந்திரன் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தார்.

அந்த மனுவை விசாரித்த நீதிபதி வி. பாரதிதாசன், சிபிசிஐடி, சிபிஐ அமைப்புகள், 10 வருடங்கள் விசாரணை நடத்தியும் கொலைக்கான நோக்கம் கண்டறியப்படவில்லை எனக் கூறி வழக்கை விசாரிக்க சிறப்பு புலனாய்வு குழுவை அமைத்து சென்ற மாதம் உத்தரவு பிறப்பித்தார். அந்த சிறப்பு புலனாய்வு குழுவின் விசாரணையில் புது துப்பு துலங்கியுள்ளது என்றும் சம்பவம் நடந்த காலத்தில் பணியிலிருந்த 6 காவல்துறையினர் உள்பட 198 சாட்சிகள் விசாரிக்கப்பட்டு இருப்பதாகவும், உயர் அதிகாரிகளையும் விசாரிக்க உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியது. இந்த நிலையில் கொலை நடைபெற்று 10 வருடங்களாகியும் குற்றவாளிகள் பிடிபடாமல் இருப்பதால், திருச்சி சிபிசிஐடி காவல்துறையினர் தரப்பில் போஸ்டர் ஒன்று ஒட்டப்பட்டுள்ளது. அந்த போஸ்டரில் “திருச்சி ராமஜெயம் கொலைவழக்கு குறித்து சரியான தகவல்களை துப்புகொடுப்பவர்களுக்கு ரூபாய் 50 லட்சம் சன்மானம் வழங்கப்படும். அதுமட்டுமல்லாமல் துப்பு கொடுப்பவர்களின் தகவல் ரகசியம் காக்கப்படும்” என்று இருக்கிறது. இந்த போஸ்டர் கோவை மாநகர் முழுதும் ஒட்டப்பட்டுள்ளது.

Categories

Tech |