ராமஜெயம் கொலை வழக்கில் 12 பேர் உண்மை கண்டறியும் சோதனைக்கு சம்மதம் தெரிவித்துள்ளனர்.
ராமஜெயம் கொலை வழக்கு தொடர்பாக சந்தேகத்துக்குரிய 13 பேரிடம் உண்மை கண்டறியும் சோதனை நடத்துவதற்கு சிறப்பு புலனாய்வு குழுவினர் நீதிபதி முன் ஏற்கனவே மனு தாக்கல் செய்திருந்தனர். அந்த சிறப்பு புலனாய்வு குழுவை சேர்ந்த காவல்துறை கண்காணிப்பாளர் ஜெயக்குமார், அதேபோல துணை காவல் கண்காணிப்பாளர் மதன் உள்ளிட்டோர் இன்று திருச்சி குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜராகி உள்ளனர்.
கடந்த வாரம் இந்த சந்தேகத்திற்குரிய 9 நபர்கள் மட்டும் ஆஜரானார்கள். 9 பேரில் 8 பேர் உண்மை கண்டறியும் சோதனைக்கு சம்மதம் தெரிவித்தனர். மீதமுள்ள 4 பேர் என மொத்தம் 13 பேரிடம் சோதனை நடத்த வேண்டும் என நீதிபதியிடம் ஏற்கனவே சிறப்பு புலனாய்வு குழுவினர் மனு தாக்கல் செய்திருந்தனர். இந்தநிலையில் 4 பேர் ஆஜராகாத நிலையில், இன்று மோகன்ராம், நரைமுடி கணேசன், தினேஷ், செந்தில் ஆகியோர் திருச்சி குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜராகி சம்மதம் தெரிவித்தனர்.
13 பேரிடம் உண்மை கண்டறியும் சோதனை நடத்த சிறப்பு புலனாய்வு குழு அனுமதி கேட்டிருந்த நிலையில், சத்யராஜ், லட்சுமி நாராயணன், சாமி ரவி, ராஜ்குமார், சிவா என்கிற குணசேகரன், கலைவாணன், மாரிமுத்து சுரேந்தர் கலைவாணன், மோகன்ராம், நரைமுடி கணேசன், தினேஷ், செந்தில் ஆகிய 12 பேர் சம்மதம் தெரிவித்துள்ளனர். சண்முகம் என்பவர் மட்டும் உண்மை கண்டறியும் சோதனைக்கு சம்மதம் தெரிவிக்கவில்லை. இந்த வழக்கு ஏற்கனவே 3 முறை விசாரணை என்பது நடைபெற்றது. கடந்த 1ஆம் தேதி, 7ஆம் தேதி 14 ஆம் தேதி மற்றும் மீண்டும் இன்று விசாரணை என்பது நடைபெற்று வருகிறது. தற்போது நீதிபதி அவர்களிடம் விசாரணை நடத்தி வருகிறார்.
உண்மை கண்டறியும் சோதனை நடத்தும் போது உடன் ஒரு மருத்துவரும், வழக்கறிஞரும் இருக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.