ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், சட்டப்பேரவைத் தொகுதிகளின் இறுதி வாக்காளர் பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது. அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் முன்னிலையில் மாவட்ட ஆட்சியர் வீரராகவ ராவ் இப்பட்டியலை வெளியிட்டார்.
வாக்காளர் பட்டியல் வெளியிட்ட பின் செய்தியாளர்களைச் சந்தித்த மாவட்ட ஆட்சியர் வீரராகவ ராவ் கூறுகையில், ‘தற்போது வெளியிடப்பட்டுள்ள இறுதி வாக்காளர் பட்டியலானது, கடந்த மாதம் 22ஆம் தேதி வரை பெறப்பட்ட மனுக்களின் அடிப்படையில் இறுதி செய்யப்பட்டவையாகும். நான்கு சட்டமன்றத் தொகுதியில் உள்ள 1369 பாகத்தில் 5 லட்சத்து 67 ஆயிரத்து 307 ஆண் வாக்காளர்கள், 5 லட்சத்து 69 ஆயிரத்து 193 பெண் வாக்காளர்கள், 69 மூன்றாம் பாலின வாக்காளர்கள் என மொத்தம் 11,36,569 உள்ளனர்.
கடந்த 2019 டிசம்பர் 23ஆம் தேதியிலிருந்து 2020 ஜனவரி 22ஆம் தேதி வரையிலான பெறப்பட்ட மனுக்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் பார்த்தால் 8 ஆயிரத்து 848 ஆண் வாக்காளர்களும், 9 ஆயிரத்து 252 பெண் வாக்காளர்கள், ஒரு மூன்றாம் பாலின வாக்காளரும் என மொத்தமாக 18 ஆயிரத்து 101 பேர் வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
இதே காலத்தில் மனுக்களின் அடிப்படையில் 962 ஆண் வாக்காளர்கள், 1018 பெண் வாக்காளர்கள், இரண்டு மூன்றாம் பாலின வாக்காளர்கள் என 1,982 வாக்காளர்கள் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளது’ என அவர் கூறினார். இந்த நிகழ்வில் மாவட்ட வருவாய் உயர் அலுவலர்கள், அனைத்துக் கட்சி பிரமுகர்கள், வட்டாட்சியர்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.