குடும்ப தகராறில் பெற்ற தாய் என்றும் பாராமல் மகன் கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூரை அடுத்துள்ள கீழக்கன்னிசேரி பகுதியில் மங்கையரசு என்பவர் வசித்துவருகிறார். ஆடு மேய்க்கும் தொழிலாளியான இவருக்கு அமுதா என்ற மனைவியும், உதயகுமார்(26), முனியசாமி என்ற 2 மகன்களும் உள்ளனர். இந்நிலையில் மங்கையரசு வெளியூரில் வேலை பார்த்து வரும் நிலையில் அமுதாவுக்கும் அவரது மூத்த மகன் உதயகுமாருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுவது வழக்கம். இதேபோல் சம்பவத்தன்று இரவு ஏற்பட்ட வாக்குவாதத்தில் ஆத்திரமடைந்த உதயகுமார் தாயென்றும் பாராமல் அமுதாவின் கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளார்.
இதனையடுத்து உதயகுமார் மறுநாள் காலையில் தானாகவே முதுகுளத்தூர் காவல் நிலையத்திற்கு சென்று சரணடைந்துள்ளார். இதனை அறிந்த காவல்துறையினர் அவரது வீட்டிற்கு விரைந்து சென்று அமுதாவின் உடலை மீட்டு உடற்கூறு ஆய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து உதயகுமாரை கைது செய்துள்ளனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.