ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி தாலுகா வழிமறிச்சான் கிராமத்தில் ஒரு பழமையான நடுகல் சிலை இருப்பதாக அந்த கிராமத்தை சேர்ந்த ராமன் என்பவர் கூறியுள்ளார். இதனை அடுத்து பாண்டியநாடு பண்பாட்டு மையத்தை சேர்ந்த தாமரைக்கண்ணன் மீனாட்சிசுந்தரம் மற்றும் வழிமறிச்சான் சாலை சேர்ந்த சிவா, சக்தி முருகன் போன்றோர் அங்கு கள ஆய்வுகளை மேற்கொண்டு இருக்கின்றனர். அப்போது அந்த சிலை ஒரு உயர் குடியை சேர்ந்த மூதாட்டிக்கு எடுக்கப்பட்ட நடுகல் என்பதை கண்டறிந்துள்ளனர்.
மேலும் இது பற்றி அவர்கள் பேசிய போது, பொதுவாக நடுகல் என்பது முற்காலங்களில் வீரதீர செயல்களான போர்களில் ஈடுபடும் வீரர்களுக்கோ அல்லது விலங்குகளுக்கு எதிராக சண்டைகளில் வெற்றி பெறுபவர்களுக்கும் அல்லது சண்டையில் உயிரிழந்தவர்களுக்கோ இல்லையெனில் சமூகத்தில் பெரிதும் போற்றத்தக்க நபர்களுக்கும் நடுகல் எடுக்கும் வழக்கம் இருந்து வந்திருக்கிறது. இந்த நிலையில் தற்போது நாங்கள் கண்டறிந்த சிற்பமும் அந்த வகையை சேர்ந்ததாகும். இந்த நடுகல் சிற்பம் இரண்டரை அடி உயரமும் ஒன்றரை அடி அகலமும் கொண்ட பலகை கல்லில் புடைப்பு சிற்பமாக செதுக்கப்பட்டிருக்கிறது.
இந்த சிலையின் இரண்டு கைகளிலும் காப்பு, கை வளையல்கள் அணிந்தபடி கழுத்தில் ருத்ராட்சத மாலையும் ஆபரணங்களும், நீண்ட காதும் தெளிவாக செதுக்கப்பட்டு இருக்கிறது. இடையில் இடைக்கச்சை அணிந்தபடியும் இரு கால்களிலும் கழலைகள் அணிந்தபடியும் சிலை நேர்த்தியாக வடிக்கப்பட்டிருக்கிறது. இந்த புடைப்புச் சிற்பம் ஒரு வயது முதிர்ந்த மூதாட்டியின் சிற்பமாகும் இதன் வடிவமைப்பும் அணிந்துள்ள ஆபரணங்களையும் பார்க்கும்போது ஒரு உயர் குடியைச் சேர்ந்த பெண்ணாகவோ அல்லது சமூகத்தில் மிகவும் மதிக்கத்தக்க பெண்மணி ஆகவும் இருந்திருக்கலாம் என தெரிகின்றது. இந்த நிலையில் தற்போது இந்த நடுகல் பாட்டி கிளவி அம்மன் என்ற பெயரில் அந்த பகுதி மக்கள் வழிபட்டு வருகிறார்கள் என தெரிவித்துள்ளார்.