ராமநாதபுரத்தில் மேற்கு வங்கத்தைச் சேர்ந்த ஒருவர் கொரோனா அறிகுறியுடன் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
உலகம் முழுவதும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியிருக்கும் கொரோனா வைரசுக்கு இதுவரை மருந்து கண்டுபிடிக்கவில்லை. இந்தியாவில் கொரோனா வைரஸால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 5ஆக உயர்ந்துள்ளது. இந்தியா தற்போதும் 2-ம் கட்டத்தில் இருப்பதால் இந்த வைரஸை கட்டுப்படுத்த மத்திய அரசு தீவிரமான முயற்சிகளை எடுத்து வருகிறது.
தமிழத்தில் இந்த வைரசால் 4 பேர் பாதிக்கப்பட்டது உறுதி செய்யப்பட்ட நிலையில், ஒருவர் குணமாகியுள்ளார். இந்த வைரஸ் தாக்கம் மேலும் அதிகரிக்காமல் இருக்க பள்ளி, கல்லூரிகளுக்கு மார்ச் 31ம் தேதி வரை விடுமுறை அறிவித்த தமிழக அரசு, திரையரங்குகள், மக்கள் கூடுமிடங்கள், ஷாப்பிங் மால்கள், பார், கடர்கரை, வழிபாட்டு தலங்கள் போன்றவற்றை வரும் 31-ம் தேதிவரை திறக்கத் தடை விதித்தது.
தமிழகத்தில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட 3 பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதேபோல சென்னை வந்த ரயில் பயணி ஒருவருக்கு கொரோனா வைரஸ் இருந்த நிலையில் அவருடன் பயணித்த 193 பெற தனிமைப்படுத்தியுள்ளதாக அமைச்சர் விஜயபாஸ்கர் கூறியுள்ளார்.
கொரோனா அச்சுறுத்தல் காரணமாக அனைத்து மாநில எல்லைகளும் வரும் 31ம் தேதி வரை மூடப்பட்டுள்ளது. இந்த நிலையில் ராமநாதபுரத்தில் மேற்கு வங்கத்தைச் சேர்ந்த ஒருவருக்கு கொரோனா அறிகுறி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அவருக்கு கொரோனா வைரஸ் இருக்கிறதா என்பதை உறுதி செய்ய ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.