ராமர் கோவிலில் நடைபெற இருக்கும் பூமி பூஜை விழாவை சிறப்பிக்க பயணம் மேற்கொள்ளும் பிரதமர் மோடியின் விவரங்களை அரசு தற்போது வெளியிட்டுள்ளது.
உத்தரப் பிரதேச மாநிலத்தில் உள்ள அயோத்தியில் நடந்துவந்த 70 வருட சச்சரவு சென்ற வருடம் நவம்பர் 9ம் தேதி உச்ச நீதிமன்றத்தால் தீர்த்து வைக்கப்பட்டது. ஐந்து நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன தலைமையில் ராமர் கோயில் கட்டுவதற்கு அனுமதி அளித்திருந்தது. அதன் தொடர்ச்சியாக, அயோத்தியில் ராமர் கோயில் கட்டுமான பணிகள் விரைவில் தொடங்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. இருந்தாலும், கொரோனா பரவல் காரணமாக கட்டுமானப் பணிகள் தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டு வந்தது.
தற்போது கொரோனா ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் கொடுக்கப்பட்டுள்ளதால் நாளை பூமி பூஜையுடன் ராமர் கோயில் கட்டுமானப் பணிகள் தொடங்க இருக்கின்றன. நாளை காலை சுமார் 11.30 மணிக்கு நடைபெற இருக்கும் அடிக்கல் நாட்டும் விழாவில் நரேந்திர மோடி பங்கேற்கவுள்ளார். மேலும் நாளை பிரதமர் மோடியின் பயண விவரம் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.
- காலை 9.35 மணி அளவில் பிரதமர் மோடி டெல்லியிலிருந்து புறப்படுகிறார்.
- 10.35 மணிக்கு பிரதமர் மோடியின் விமானம் லக்னோவில் தரை இறங்குகிறது.
- 10.40 மணிக்கு லக்னோவில் இருந்து டெல்லிக்கு ஹெலிகாப்டரில் புறப்படுகிறார்.
- 11.30 மணிக்கு சாகேத் காலனியில் ஹெலிகாப்டர் தரை இறங்குகிறது.
- 11.40 மணிக்கு அனுமன் கர்ஹியில் மோடி தரிசனம்் செய்கிறார்.
- மதியம் 12 மணிக்கு ராமர் கோயில் கட்டப்பட உள்ள இடத்தை அடைகிறார்.
- 10 நிமிடங்கள் குழந்தை வடிவில் இருக்கும் ராமரை தரிசிக்கிறார்.
- 12.15 மணிக்கு கோயில் வளாகத்தினுள் மரம் நடுவதை தொடங்கிவைக்கிறார்.
- மதியம் 12.30 மணிக்கு பூமி பூஜை தொடங்குகிறது.
- 12.40 மணிக்கு அடிக்கல் நாட்டும் விழா தொடங்குகிறது.
- மதியம் 1.10 மணிக்கு சுவாமி நிருத்யகோபால் தாஸ் உட்பட மற்ற ராம ஜென்மபூமி அறக்கட்டளை உறுப்பினர்களை சந்திக்கிறார்.
- மதியம் 2.05 மணிக்கு பிரதமர் மோடி சாகேத் காலனியிலுள்ள ஹெலிபேடிற்குச் செல்கிறார்.
- மதியம் 2.20 மணிக்கு பிரதமர் லக்னோ புறப்படுகிறார்.