இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு ராமேஸ்வரம் பயணிகள் ரயில் இன்று முதல் இயக்கப்படும் என மதுரை ரயில்வே கோட்டம் அறிவித்துள்ளது. இன்று இந்த ரயில்வே வழித்தடத்தில் ரயில் சேவை தொடங்கியது. மதுரை ராமேஸ்வரம் இடையில் காலை மாலை என இருவேளை இயக்கப்பட்டு வந்த ரயில் சேவை கொரோனா காலத்தில் நிறுத்தப்பட்டிருந்த நிலையில் இன்று மீண்டும் இயக்கப்பட்டுள்ளது. முன்னதாக பேரிடர் காலத்தில் நிறுத்திய ரயில்களை மீண்டும் இயக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்திருந்தனர். அந்த கோரிக்கையை வலியுறுத்தி தெற்கு ரயில்வே பொது மேலாளரிடம் ராமநாதபுரம் எஸ்பி மனு கொடுத்திருந்தார்.
இதை தொடர்ந்து மதுரை ராமேஸ்வரம் காலை நேர பயணிகள் ரயில், ராமேஸ்வரம் மதுரை மாலை நேர பயணிகள் ரயில்களை இன்று முதல் இயக்குவதற்கு தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. இந்த இரு வழித்தட ரயில்கள் ராமேஸ்வரம், பாம்பன், மண்டபம், மண்டபம் முகாம், உச்சிபுளி, வாலாந்தரவை, ராமநாதபுரம், சத்திரக்குடி, பரமக்குடி, சூடியூர், மானாமதுரை, ராஜகம்பீரம், திருப்பாசேத்தி, திருப்புவனம், சிலைமான், மதுரை கிழக்கு ஆகிய ஸ்டேஷன்களில் நின்று செல்லும் என கால அட்டவணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நீண்ட நாட்களுக்கு பிறகு இந்த வழித்தடத்தில் ரயில் இயக்கப்படுவதால் பலரும் பயன் பெற்றுள்ளனர்.