இந்தியா- நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டாவது ஒருநாள் போட்டி ஆக்லாந்திலுள்ள ஈடன் பார்க்கில் நடந்துவருகிறது. இதில் டாஸ் வென்ற இந்திய கேப்டன் விராட் கோலி பந்துவீச்சைத் தேர்வு செய்தார்.
பின்னர் களமிறங்கிய நியூசிலாந்து அணிக்கு கப்தில் – நிக்கோல்ஸ் இணை நல்ல தொடக்கம் கொடுத்தது. இந்த இணை முதல் விக்கெட்டுக்கு 93 ரன்களை சேர்த்திருந்தபோது, நிக்கோல்ஸ் 41 ரன்ன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
தொடர்ந்து இணைந்த கப்தில் – டாம் ப்ளெண்டல் இணை இரண்டாவது விக்கெட்டுக்கு நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. சிறப்பாக ஆடிய தொடக்க வீரர் கப்தில் அரைசதம் அடித்தார்.
இந்த இணை 2ஆவது விக்கெட்டுக்கு 49 ரன்கள் சேர்த்தபோது ப்ளெண்டல் 22 ரன்களில் ஆட்டமிழக்க, தொடர்ந்து கப்தில் 79 ரன்கள் எடுத்து ரன் அவுட்டானார். கப்தில் அவுட்ஆகி சென்றபின், நியூசி. பேட்ஸ்மேன்கள் சீட்டுக்கட்டு சரிவதைப்போல் அடுத்தடுத்து சரிந்தனர்.
கேப்டன் லாதம் 7 ரன்களிலும், ஜடேஜாவின் அற்புதமான ஃபீல்டிங்கால் ஜேம்ஸ் நீஷம் 7 ரன்களில் ரன் அவுட்டாகி வெளியேற, கிராண்ட்ஹோம் 5 ரன், ஆர்க் சேப்மேன் 1, டிம் சவுதி 3 என அடுத்தடுத்து ஆட்டமிழந்ததால் நியூசி. அணி 197 ரன்களுக்கு 8 விக்கெட்டுகளைப் பறிகொடுத்து பரிதாபமான நிலையில் இருந்தது.
ஆனால் ஒருமுனையில் விக்கெட்டுகள் சரிந்தாலும் மறுமுனையில் தூணாக நின்ற ராஸ் டெய்லர் விக்கெட் கொடுக்காமல் சீராக ரன்களை சேர்த்தார்.
9ஆவது விக்கெட்டிற்கு களமிறங்கிய அறிமுக வீரர் கைல் ஜேமிசனுடன் பார்னர்ஷிப் போட்டு ராஸ் டெய்லர் அதிரடியாக ஆடினார்.
இதனால் 61 பந்துகளில் அரைசதம் கடந்த ராஸ் டெய்லர் கடைசி ஐந்து ஓவர்களில் மட்டும் 53 ரன்கள் சேர்த்தார். அறிமுக வீரர் கைல் ஜேமிசன் தன் பங்கிற்கு 2 சிக்சர், ஒரு பவுண்டரி என விளாசினார்.
இறுதியாக நியூசிலாந்து அணி 50 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 273 ரன்களை எடுத்தது. கைல் – ராஸ் டெய்லர் இணை 9ஆவது விக்கெட்டிற்கு 76 ரன்கள் சேர்த்தது.
இறுதிவரை ஆட்டமிழக்காமல் ஆடிய டெய்லர் 73 ரன்களும், கைல் ஜேமிசன் 25 ரன்களும் எடுத்தனர். இந்திய அணி சார்பாக சாஹல் 3 விக்கெட்டுகளும், தாகூர் 2 விக்கெட்டையும் வீழ்த்தினர்.