நடிகர் விஜய்க்கு உயர் நீதிமன்றம் ஒரு லட்சம் அபராதம் விதித்தது மட்டுமல்லாமல் 15 அறிவுரைகளை வழங்கியுள்ளது.
நடிகர் விஜய் கடந்த 2012 ஆம் ஆண்டு இங்கிலாந்தில் இருந்து ரோல்ஸ் ராயல்ஸ் காரை இறக்குமதி செய்தார். இந்த காருக்கு வரி விதிக்க தடை கோரியிருந்தார். அந்த வழக்கு இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. விசாரணைக்குப் பிறகு நடிகர் விஜய்க்கு ஒரு லட்சம் அபராதம் விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும் இந்த வழக்கை தள்ளுபடி செய்தது மட்டுமல்லாமல், நடிகர் விஜய் ஒரு லட்சம் அபராத தொகையை முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு இரண்டு வாரத்தில் செலுத்தவும் ஆணை பிறப்பித்துள்ளது.
இதையடுத்து இந்த வழக்கை விசாரணை செய்த உயர்நீதிமன்ற நீதிபதி எம்எஸ் சுப்பிரமணியன் விஜய்க்கு அறிவுரைகளை வழங்கியுள்ளார். அதில் அவர் கூறியுள்ளதாவது: “சமூகநீதிக்கு பாடுபடுவதாக பிரதிபலிக்கும் நடிகர்கள் வரிவிலக்கு கூறுவதை ஏற்றுக்கொள்ள முடியாது. மேலும் நடிகர்கள் படத்தில் மட்டும் ஹீரோவாக இல்லாமல், நிஜத்திலும் ஹீரோவாக இருக்க வேண்டும். வரி என்பது நன்கொடை கிடையாது இது ஒவ்வொரு குடிமகனின் கட்டாய பங்களிப்பு. வரி செலுத்துவது என்பது ஒவ்வொரு குடிமகனின் கடமை” என்று அவர் தெரிவித்துள்ளார்.