ரீட்ரேடிங் செய்யப்படும் டயர்கள் 10 சதவீதம் விலை உயர்த்தப்பட்டு நாளை முதல் விற்பனை செய்ய முடிவு எடுத்திருப்பதாக ஈரோடு சங்கத் தலைவர் கூறியுள்ளார்.
ஈரோடு மாவட்டத்தில் டயர் ரீட்ரேடிங் சங்க கூட்டமானது நேற்று நடைபெற்றது. அப்போது தலைவர் அப்துல் கபூர் கூறியதாவது, அனைத்து வகையான வாகனங்களிலிருந்தும் டயர்களை ரீட்ரேடிங் செய்து பயன்படுத்துவது வாகன உரிமையாளர்களுக்கு பொருளாதார ரீதியாக உதவுகிறது.
அண்மை காலமாக சரக்கு மற்றும் சேவை வரி உயர்வு, இயற்கை ரப்பர் விலை உயர்வு, பெட்ரோல்- டீசல் விலை உயர்வு, கொரோனா காலத்தில் வாகன இயக்கம் குறைவு உள்ளிட்ட பல காரணங்களால் 50 சதவீத தொழிற்சாலைகள் மூடப்பட்டு விட்டது. மேலும் ஐயாயிரத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை இழந்து இருக்கின்றனர். ஆகையால் இத்தொழிலை காப்பாற்றும் வகையிலும் மூலப்பொருட்கள் விலை ஏற்றத்தின் காரணத்தாலும் நாளை முதல் ரீட்ரேடிங் செய்யப்பட்ட டயர்கள் 10 சதவீதம் விலை உயர்த்தப்பட்டு விற்பனை செய்ய முடிவெடுத்து இருக்கின்றோம். ஆகையால் வாகன உரிமையாளர்கள் ஒத்துழைப்பு நல்க வேண்டும் என அவர் கூறியுள்ளார்.