டி20 மூன்றாவது போட்டியில் ருதுராஜ் கெய்க்வாட்டிற்கு வாய்ப்பு கிடைக்கும் என கிரிக்கெட் விமர்சகர்கள் பெரிதும் எதிர்பார்த்து வருகின்றனர்.
இந்தியாவிற்கு வந்துள்ள மேற்கிந்திய தீவுகள் அணி முதலில் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடியது. இதில் இந்திய அணி முழு ஆதிக்கம் செலுத்திய நிலையில் 3-0 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றி உள்ளது. இதை தொடர்ந்து கொல்கத்தாவில் நேற்று முதல் மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடர் ஆரம்பமாகியுள்ளது. இதனையடுத்து இந்திய அணி முதல் போட்டியில் 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற நிலையில், அடுத்த போட்டியில் 8 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று 2-0 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியது.
இந்த நிலையில் மூன்றாவது போட்டியில் இந்திய அணி தொடரை கைப்பற்றியதால், அதில் இளம் வீரர்களுக்கு அதிக அளவு வாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதிலும் குறிப்பாக ருதுராஜ் கெய்க்வாட்டிற்கு டி20 மூன்றாவது போட்டியில் வாய்ப்பு உறுதியாக கிடைக்கும் என கிரிக்கெட் விமர்சகர்கள் தரப்பில் கூறி வருகின்றனர். மேலும் இந்த விவகாரத்தை குறித்து பேசிய முன்னாள் வீரர் வசீம் ஜாப்பர், நடக்க உள்ள மூன்றாவது போட்டியில் ருதுராஜிற்கு வாய்ப்பு வழங்கக் கூடாது என தெரிவித்து வருகிறார்.
இந்நிலையில் சிறிது காலம் ருதுராஜ் பொறுத்திருக்க வேண்டும் என்று கூறிய ஜாப்பர், ஒரே ஒரு போட்டியில் மட்டும் வாய்ப்பு கொடுப்பதில் எந்தவிதமான பலனும் இல்லை அந்த போட்டியில் ஒருவேளை அவர் சொதப்பி விட்டால் திறமையற்றவர் என கருதப்படுவார். இதனால் அவருக்கு தேவையில்லாத மன அழுத்தம் ஏற்படக்கூடும் என கூறியுள்ளார். இதனைத் தொடர்ந்து இவரின் கருத்துக்கு பலரும் வரவேற்பு கொடுத்து உள்ளனர். ஏனெனில் பெயருக்கு ஒரு போட்டியில் வாய்ப்பு கொடுப்பதைவிட, இஷான் கிஷனுக்கு ஓபனருக்கான இடத்தை கொடுத்ததுபோல், அடுத்த ஒரு வாரத்தில் ஆரம்பமாகவுள்ள இலங்கைக்கு எதிரான டி20 தொடரில் ருதுராஜ் கெய்க்வாட்டிற்கு வாய்ப்பு கொடுக்க வேண்டும் என ரசிகர்கள் தரப்பில் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.