ஐபிஎல்லில் நேற்று மும்பை – கொல்கத்தா அணிகள் மோதிய போட்டியில் கொல்கத்தா அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
ஐபிஎல் 2021 தொடரின் 34 வது லீக் போட்டி நேற்று அபுதாபியில் நடந்தது. இந்த போட்டியில் மோர்கன் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும், ரோஹித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியும் மோதின. டாஸ் வென்ற கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இதனால் மும்பை இந்தியன்ஸ் அணியின் தொடக்க ஆட்டக்காரரான ரோகித் சர்மாவும், குவின்டன் டி காக் களமிறங்கி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.இதனால் ஸ்கோர் ஜெட் வேகத்தில் உயர்ந்தது.
மும்பை இந்தியன்ஸ் அணி 9.2 ஓவரில் 78 ரன்கள் எடுத்திருந்த போது 30 பந்துகளை சந்தித்த ரோகித் சர்மா 33 ரன்களில் ஆட்டமிழந்தார். பின்னர் 2ஆவது விக்கெட்டுக்கு களமிறங்கிய சூர்யகுமார் யாதவ் 5 ரன்களில் ஆட்டமிழந்ததை போல மும்பை இந்தியன்ஸ் அணியின் மிடில் ஆர்டர் யாரும் சரியாக விளையாடாததால் 20 ஓவர்களில் மும்பை அணி 6 விக்கெட் இழந்து 155 ரன்கள் எடுத்தது.
சிறப்பாக ஆடிய குயின்டன் டி காக் அரை சதம் கடந்து 42 பந்துகளில் 55 ரன் எடுத்து மும்பை அணிக்காக அதிகபட்ச ஸ்கோர் எடுத்து ஆட்டமிழந்தார்.கொல்கத்தா அணி சார்பில் அதிகபட்சமாக பெர்குசன் 2விக்கெட்டும், பிரசித் 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.
156 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய கொல்கத்தா அணியின் தொடக்க வீரர் வெங்கடேஷ் – கில்ல் மும்பை பந்துவீச்சாளர்களின் தொடக்க ஓவர்களிலே ரன் வேட்டையை தொடங்கினர். கில் 13 ரன்களில் ஆட்டமிழக்க இருவரின் ருத்ரதாண்ட ஆட்டத்தால் அணியின் ஸ்கோர் மளமளவென உயர்ந்தது.
வெங்கடேஷுடன் – திரிபாதி ஜோடி சேர்ந்து மும்பை பந்து வீச்சளர்களை பொளந்து கட்டியது. 25 பந்தில் வெங்கடேஷ் அரைசதம் அடிக்க, திரிபாதி 29 பந்தில் அரைசதம் கடந்தார். 53 ரணில் வெங்கடேஷ் ஆட்டமிழக்க திரிபாதி இறுதி வரை ஆட்டமிழக்காமல் 73ரன் எடுத்து கொல்கத்தா வெற்றியை உறுதி செய்தார். கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 3 விக்கெட் இழப்புக்கு 159 ரன்கள் எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.