செல்லாத அல்லது சேதமடைந்த அல்லது அழுக்கடைந்த ரூபாய் நோட்டுகளை பொதுமக்கள் அனைவரும் வங்கிகள் மூலம் மாற்றிக் கொள்வதற்கான விதிமுறைகளை ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. முன்பெல்லாம் ரூபாய் தாள்களில் உள்ள சீரியல் எண்களை வைத்து புது நோட்டுகளை வங்கிகளிடமிருந்து பெற்று கொள்ளலாம். ரூபாய் நோட்டுகள் என்ன ஆனாலும் சரி அந்த எண்கள் மட்டும் இருந்தால் புது நோட்டுகளை பெற்றுக் கொள்ள முடியும் . ஆனால் சேதம் என்பது எண்களை கவனித்து வருவதில்லை. கரையான் அரிப்பு, தீ போன்றவை ரூபாய் தாள்களின் எண்களோடு எந்த பகுதியையும் அழித்து விடுகின்றன.
இதை கருத்தில் கொண்டு ரூபாய் நோட்டுகளை மாற்றும் விதிமுறைகளை ஆர்பிஐ வங்கி திருத்தி அமைத்தது. அதன்படி சேதமான ரூபாய் நோட்டுகளின் மதிப்பு சேதத்தினால் மீதம் இருக்கும் அந்த நோட்டின் அளவோடு கணக்கிட்டு மதிப்பிடப்படுகிறது. அந்த வகையில் 1 முதல் 20 ரூபாய் வரையில் தனி விதிகளும் 50 முதல் 2000 ரூபாய் வரை தனி விதிகளும் விதிக்கப்பட்டுள்ளது. இந்த வசதியை வாடிக்கையாளர்களுக்கு மட்டுமின்றி பொதுமக்கள் அனைவருக்குமே வங்கிகள் வழங்க வேண்டும் என்று ரிசர்வ் வங்கி அறிவுறுத்தியுள்ளது. இதன் மூலம் ரிசர்வ் வங்கியின் கீழ்வரும் வங்கிக் கிளைகள் அனைத்திலும் பொதுமக்கள் ரூபாய் நோட்டுகளை மாற்றிக் கொள்ளலாம்.