வணிகப் பயன்பாடு சிலிண்டரின் விலை 268.50 ரூபாய் உயர்ந்துள்ளது.
மத்திய அரசு சமையல் கேஸ் மற்றும் வணிகப் பயன்பாடு சிலிண்டரின் விலையை மாதந்தோறும் நிர்ணயித்து வருகின்றது. அந்த வகையில் ஒவ்வொரு மாதமும் 1 ஆம் தேதி எண்ணெய் நிறுவனங்கள் புதிய விலையை நிர்ணயித்து அறிவிக்கின்றது. இந்நிலையில் இந்த மாதத்திற்கான விலை நிர்ணயம் செய்யப்பட்டு இன்று அறிவிக்கப்பட்டது. இதில் வணிகப் பயன்பாட்டுக்கு பயன்படுத்தப்படும் கேஸ் சிலிண்டரின் விலை 268.50 ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளது.
19 கிலோ எடையுள்ள வணிக பயன்பாட்டு சிலிண்டரின் விலை தற்போது 2406 ரூபாய்க்கு விற்பனையாகி வருகிறது. இந்த புதிய விலை இன்று முதல் அமலுக்கு வருகிறது. ஆனால் வீட்டு உபயோக சிலிண்டரின் விலை எந்தவித மாற்றமும் இல்லாமல் 965.50 ரூபாய்க்கு விற்பனையாகி வருகிறது. இதேபோல் பெட்ரோல், டீசல் விலையில் இன்று எந்தவித மாற்றமும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.